பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், இலங்கைக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகளுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ்மக்களை நோக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பில் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள்
விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் எமது மக்களின் பாதுகாப்பு குறித்து நாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில் அண்மைக் காலமாக சிங்கள இனவாத அரசினால் திட்டமிட்ட வகையில் புலம்பெயர் மக்களை நோக்கி அவர்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதனை எமது நட்பு நாடுகளினூடாக நாம் அறிந்துள்ளோம்.
குறிப்பாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நலன்களும் அதேசமயம் அவர்கள் பயணம் செய்யும் நாடுகள், பயணத்தின் போது இலங்கை அரசு செல்வாக்கு செலுத்தும் நாடுகளினால் ஏற்படக் கூடிய பாதுகாப்பின்மை மற்றும் அசௌகரியங்கள் குறித்து மிக விழிப்புடன் இருக்க வேண்டிய கால கட்டமாக நாம் இதனை கருதுகிறோம்.
தமிழ் மக்களின் விடுதலை உணர்வினையும் அதற்கான செயற்பாடுகளையும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததன் மூலம் நசுக்கி போட்ட சிங்கள ஆட்சியாளர்களினால், புலம்பெயர் தேசத்தில் விடுதலை நோக்கிய எமது ஒருமித்த ஜனநாயகச் செயற்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கூடவே நடந்து முடிந்த மனித உரிமைகள் மாநாட்டின் போது அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அதிக வாக்குகளால் வெற்றி பெற்றதும், அதற்காக புலம்பெயர் தேசத்து தமிழர் அமைப்புக்கள் கணிசமான அளவில் பங்காற்றி இருந்தமையும் சிங்கள அரசினை கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கியது.
அதன் தொடர்ச்சியாக நீங்கள் எல்லோரும் அறிந்தது போல சிங்கள இனவாத ஆட்சியாளரின் கொடூரக் கரங்கள் புலம்பெயர் தேசத்து மக்களை நோக்கி நீண்டுள்ளது.
ஜனநாயக ரீதியிலான தமிழர் விடுதலை செயற்பாட்டாளர்களையும், தாம் வாழும் நாடுகளில் அனைத்து நிலைகளிலும் முன்னேறி வரும் எமது மக்களையும் ஒடுக்குவதற்கு அது கங்கணம் கட்டியுள்ளதனை அதன் அண்மைய செயற்பாடுகள் சுட்டிக் காட்டுகின்றன .
இவற்றினை மக்களுக்கு அறியத் தருவதன் மூலம் சிங்கள அரசின் கபட நடவடிக்கைகளில் இருந்து ஓரளவிற்கேனும் மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கேற்ப ஜனநாயக வழியிற் செயற்படும் தமிழர் அமைப்புக்களை தடைசெய்தமை மற்றும் பலரை நாட்டுக்குள் புக முடியாமற் செய்தமை அதன் முதற்படி அடுத்த கட்டமாக இனிமேல் புலம் பெயர் நாடுகளில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையைக் கழிக்கவும் உறவினர்களைப் பார்க்கவும் செல்பவர்களை அது குறி வைத்துள்ளது.
அவர்களுக்கு தெரியாமலே அவர்களைப் பலத்த கண்காணிப்பிற்கு உட்படுத்தவிருக்கிறது. மேலும் அவர்களில் பலரை சந்தேகத்திற்கு உரியவர்கள் என்று பொய்யான காரணங்களின் கீழ் கைது செய்யவும்,அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
தனது திட்டத்தினை செயற்படுத்துவதற்கு ஒரு உத்தியாக தமிழ் மக்களுக்கு தாயகம் நோக்கி பயணம் செய்யும் ஆர்வத்தினை தூண்டும் வகையில் தன்னுடைய நாட்டு விமானங்களின் ஊடாக பயணம் செய்வதற்கு விமானச் சீட்டுக்களின் விலையினை மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே கணிசமான அளவு குறைத்துள்ளது சிறீ லங்கா அரசின் இத்தகைய உத்திகளைப் புரிந்து கொண்ட சில நாடுகள் அண்மையில் தமது நாட்டுக் குடிமக்கள் சிறீ லங்காவிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என அறிவித்துள்ளன.
அதிலும் மிக முக்கியமாக தாம் வாழும் நாடுகளின் குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ள தமிழ் மக்கள் தற்சமயம் இலங்கைக்கு பயணம் செய்வது நல்லதல்ல என்பதனை அது மறைமுகமாக வலியுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பல பெரிய நாடுகள் இந்த அறிவிப்பினை விடவுள்ளன என்பது குறித்து நம்பகமான செய்திகள் எமக்கு கிடைத்துள்ளன. இந்நாடுகளின் பாதுகாப்பு குறித்த மேற்படி அறிவிப்பானது சிறீ லங்காவின் நட்பு நாடுகளுக்கும் மற்றும் அது செல்வாக்கு செலுத்தும் நாடுகளுக்கும் பொருந்தும் என்பது வெளிப்படை.
இத்தகைய அறிவிப்புக்களின் பின்னர் தமிழ் மக்கள் இலங்கைக்கு பயணம் செய்யும் போது ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள் வசிக்கும் அல்லது குடியுரிமை பெற்றுக் கொண்ட நாடுகள் பொறுப்பேற்க மாட்டாது என்பதனை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
எனவே எங்கள் விடயத்தில் அனுசரணையான நாடுகளின் தகவல்களின் படியும்இ வெவ் வேறு நாடுகளுடன் நாம் பேசிய வகையிலும் தமிழ் மக்கள் சிறிது காலத்திற்கு சிறீலங்காவிற்கு பயணம் செய்யாதிருப்பது நல்லது என நாம் கருதுகிறோம்.
குறைந்தபட்சம் இந்த வருடம் என்றாலும் சிறீ லங்காவிற்கு பயணம் செய்வதனை அவர்களின் பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் எமது மக்களை வேண்டிக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக