திங்கள், 2 ஜூன், 2014

பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து காணி சுவீகரிப்பு முயற்சி கைவிடப்பட்டது!!



அச்சுவேலி மற்றும் நுணாவில் பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை அளக்க வந்த நில அளவைத் திணைக்களத்தினர் அப்பகுதியில் கூடிய மக்களால் திருப்பி அனுப்பட்டனர். அச்சுவேலி மற்றும் நுணாவில் பகுதிகளில் நீண்ட காலமாக இராணுவத்தினரின் பிடியில் இருந்த காணிகளை நிரந்தரமாகக் கையகப்படுத்தும் நோக்கில் அவற்றை அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலை அந்தப்பகுதிகளுக்குச் சென்றனர்.

இதன்போது அங்கு கூடிய காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக காணி அளக்கும் பணியை இடைநிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். நுணாவில் 11 ஏக்கர் தனியார் காணியை கையகப்படுத்த அவற்றை அளவீடு செய்வதற்காக இன்று காலை அதிகாரிகள் வந்திருந்தனர். இதனை எதிர்த்த காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக இராணுவத்தினரின் பிடியிருந்த தமது காணிகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தாம்
முறைப்பாடு செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

அச்சுவேலிப் பகுதியிலும், அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு தலைமை அலுவலக கட்டடத்தொகுதி மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் பத்து ஏக்கர் வரையான காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. இதற்கும் பொதுமக்கள் கூடி எதிர்ப்புத் தெரிவித்ததால் காணி அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதேவேளை சம்பவ இடத்திற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், சிவயோகன், மு.பரஞ்சோதி, எஸ்.சுகிர்தன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும் பிரதேச சபை உறுப்பினர்களும் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன், பொதுமக்களுடைய காணிகளை அவர்கள் உரிமை கோரும் நிலையிலும் அரசு அபகரிக்க முயற்சிப்பதற்கு எதிராக மாகாண சபையின் அடுத்த கூட்டத்தில் கவனத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக