யாழ். நகரில் விடுதி ஒன்றின் கூரையில் இருந்து மீட்கப்பட்ட சிறியவகை தானியங்கி விமானம் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றினுடையது. அவர்கள் அனுமதிபெற்று தமது விளம்பரத் தேவைகளுக்காக அந்த விமானத்தை பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க. யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேற்கூரையில் இருந்து நேற்று மாலை சிறிய ரக மர்ம விமானம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது. அத்துடன் தமது விமானம் ஒன்று
காணாமற்போயுள்ளதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனமும் முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறியரக விமானம் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றினுடையது. இந்த நிறுவனம் மொனராகலை, தம்புள்ளை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றது. இதேபோல யாழ்ப்பாணத்திலும் அவர்கள் விளம்பர நடவடிக்கையை மேற்கொள்ளும் போதே அதற்குரிய பற்றரி சார்ஜ் இல்லாமல் அது விடுதியின் மேல் விழுந்துள்ளது.
அந்த விமானம் 100 மீற்றர் தூரத்திற்கு பறக்க கூடியதாகும். இந்த விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியையும் அவர்கள் பெற்றிருக்கின்றனர். அதற்குரிய அனுமதிக் கடிதங்களை எமக்கு காட்டியதுடன் குறித்த விமானத்தின் அடையாளத்தையும் எமக்கு கூறியதை அடுத்து அந்த சிறிய ரக விமானத்தை உரியவர்களிடம் கையளித்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக