புதன், 4 ஜூன், 2014

தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் - மோடியிடம் ஜெயலலிதா கோரிக்கை !!


இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனித் தமிழீழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியிலும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தனது கோரிக்கைகள் உள்ளடங்கிய 64 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமரிடம் இன்று கையளித்தார். இந்த மனுவிலேயே
மேற்படி கோரிக்கையை அவர் விடுத்திருக்கிறார் என புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியவந்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றை கையளித்தார். அந்த மனுவில் காணப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:-

இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐ.நாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும், தனித் தமிழீழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும், பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும், 1974, 76ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும், என்றும் கோரியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் நதிநீரை 142 அடிக்கு உயர்த்துவதைக் கண்காணிக்க மத்திய நீர் ஆணையப் பிரதிநிதியை நியமிக்க வேண்டும், நெய்யாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் வேண்டும், தீபகற்ப நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த மனுவில் அடங்குகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக