ஞாயிறு, 15 ஜூன், 2014

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஆக்கபூர்வமாக இந்திய அரசு செயற்படுமாம்!!

"இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நீண்ட காலம் நின்று நிலைக்கக்கூடிய தீர்வு ஒன்றை காண்பதற்காக ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு வருகின்றோம்." - இவ்வாறு இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில்
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியவை வருமாறு:- "தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆகியன சுமுகமாகத் தீர்க்கப்படவேண்டும் என்பதில் பாரதீய ஜனதாக் கட்சி உறுதியாகவுள்ளது. எமது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எதிர்கட்சித் தலைவராக இருந்த போதே இலங்கைக்குச் சென்று தமிழர்களின் நலன் குறித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இப்போதும் அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். தமிழக மீனவர் பிரச்சினைகளைத் தீர்க்க பா.ஜ.க. அரசு முழு முயற்சிகளை எடுக்கும். மீனவர்கள் கைது செய்யப்படவே கூடாது என்பதுதான் வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது" - என்றார் அவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக