வியாழன், 11 நவம்பர், 2010
மலையக மக்களின் லயன் குடியிருப்புக் கலாசாரம் மாற்றியமைக்கப்பட்டு தனித்தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும்-வீ.இராதாகிருஸ்ணன் எம்.பி..!
மலையக மக்களின் லயன் குடியிருப்புக் கலாசாரம் மாற்றியமைக்கப்பட்டு அம்மக்களுக்கும் தனித்தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும். அத்தோடு தீர்க்கப்படாமல் இருக்கும் அம்மக்களின் இதர பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் புதிய அரசியல்துறை தலைவரும் எம்.பியுமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மலையக மக்களுக்கான தனித்தனி வீட்டுத் திட்டத்தினை முதன்முதலில் ஆரம்பித்துவைத்தவர் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமரருமான பெ.சந்திரசேகரன் ஆவார். அவ்வேலைத்திட்டத்தினூடாக 25 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. நான் 1982ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக எனது அரசியல் பயணத்தினை ஆரம்பித்தேன். அதன் அடிப்படையில் பிரதேச சபை, நகரசபை, மாகாணசபை மற்றும் நாடாளுமன்றம் என 28 வருடங்களாக அரசியலில் இருக்கின்றேன். எனது அரசியல் பயணத்தில் மலையக மக்களுக்கு என்னாலான சேவைகளை செய்துள்ளேன். தற்போது மலையக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதுடன் அரசியல் துறை தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளேன். எனவே இனி முன்னணியின் அரசியல் கொள்கைக்கு அமைவாக எனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வேன். நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானை மறக்கமாட்டேன். அவரே எனது அரசியல் குருவாவார். நாளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளேன். அதன்போது மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளேன். அதேபோன்று வெகுவிரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக