ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கிளிநொச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு..!!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி, கரச்சி பிரதேச செயலக அலுவலகத்தில் நேற்றுக்காலை அதன் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் ஆரம்பமான அமர்வில் பெருமளவிலான பொதுமக்கள் நேரடியாகச் சாட்சியமளித்தனர். மேற்படி பிரதேச மக்கள் சுதந்திரமாக சாட்சியமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென விசேட மொழிபெயர்ப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இங்கு சாட்சியமளித்த பெரும்பாலானவர் கள் காணாமல் போனோர் தொடர்பாகவும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாகவும் மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆணைக்குழு உறுப்பினர்கள் இதனை மிகவும் அவதானத்துடன் செவிமடுத்ததோடு சாட்சியமளித்தவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணைகளையும் நடத்தினர். அதேநேரம் சாட்சியமளித்த அனைவருமே காணாமல் போனோர், தடுத்து வைக்கப் பட்டுள்ளோர் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதைச் செவிமடுத்த ஆணைக்குழுத் தலைவர், அவைகளை எழுத்து மூலமாகத் தரும்படி கேட்டுக்கொண்டதோடு, அவர்களுக்கு வெள்ளைத் தாள்களை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்தார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா, காணாமல் போனோர், தடுத்து வைக்கப் பட்டுள்ளோர் தொடர்பாக சி.ஐ.டி.யினரை அழைத்துப் பேசவுள்ளேன் என்று தெரிவித்தார். இதற்காக ஆணைக்குழுவின் ஒருநாள் அமர்வுக்கு சி.ஐ.டி.யினர் அழைக்கப்படுவர் என்று கூறினார். இது தொடர்பாக சி.ஐ.டி.யினரிடம் ஆராய்ந்து உண்மை நிலையை அறிவிப்பேன் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக