வெள்ளி, 12 ஜூன், 2015

பெருவிழாக்களாய் கூத்து ஆற்றுகைகள் - சி.துஜான்

நடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் - கிழக்குப் பல்கலைக்கழகம்:-
இன்றைய இயந்திரச்சூழலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதர்கள்; நிதமும் கடிகார முள்ளின் சுழற்சியை எண்ணி எண்ணி அதனை தோற்கடிக்க முயன்று ஆற்றாமை அவர்களது மனதை இறுக்கிக் கொண்டது. இதன் பேறாக கடற்கரைகள், அமைதியான இடங்கள், சுற்றுலாக்கள் செல்லுதல் என தம்மை நெகிழ்ச்சிபடுத்த முற்படுகின்றனர். இதனை கையகப்படுத்திக் கொண்டோர் தமது அறிவுச்செல்வத்தின் சாதூரியத்தால் இசை நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், விந்தை நிகழ்வுகளை நடாத்தி தம் கல்லாவை நிறைத்துக் கொள்கின்றனர். இதற்கு நகரம் மட்டுமல்ல கிராமிய மக்களும் பலிக்கடாவாகின்றனர்.

இத்தகைய போராட்டங்களின் மத்தியிலும் அவற்றை எதிர்கொண்டு வாழத் தக்க சூழலை அமைத்து தனித்துவம் தரும் தன்மையுடன் பராம்பரிய கலைகள் கிராமங்கள் தோறும் நிகழ்ந்தும் வருகின்றன. கலைவடிவங்கள் அல்லது ஏனைய வடிவங்கள் தான்இயங்கும் தளத்தின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பண்பாடுகளினால் தீர்மானம் கொண்டவை இது சகல இடங்களுக்கும் பொருந்தும். இக்கலைகளின் நேரிடை எதிர்கொள்வோர் அச்சூழலுக்கே உரித்தான பார்வையாளர், பங்காளரே சில தேவை கருதி மாற்று இடங்களிலும் வேறு பண்பாட்டு கலாச்சார பின்னணிகொண்ட பார்ப்போரை இலக்குக்கு உட்படுத்துவதும் உண்டு.




பராம்பரியத்தை உயிர்த் துடிப்புடன் பேணிவரும் பிரதேசங்களுள் மட்டக்களப்பும் ஒன்றாகவுள்ளது. இதன் தொடர் நிலையில் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முதலைக்குடா, குறிஞ்சி நகர் கிராமத்தில் 2015.05.06 (புதன்கிழமை) ஆடப்பட்ட தென்மோடி வாளபீமன் கூத்தினை கண்ணுற்றதனூடாகப் பெற்ற அனுபவங்களோடு ஏற்கனவே பார்த்த சில கூத்துக்களின் அனுபவத்தினையும் ஒருங்கேற்றி இக்கட்டுரையினை வரைகிறேன்;. அது பராம்பரிய கூத்துக்களின் பண்பாடாகவும் அமையலாம் என நம்புகிறேன்.

ஈழத்து தமிழ்ச்சமூக வாழ்வியலின் ஒரு பகுதியாக கலைகளை தம்முடன் இணைத்துக் கொண்டு இன்றுவரை அதன் இயங்கு நிலைக்கு காலாகின்றனர். இதன் அத்தனை பாராட்டும் அம்மக்களையே சார வேண்டும். இக்கலைகள் கிழக்கு மண்ணில் பல்கூறுகளையும் நோக்குகளையும் கொண்டதாக கலைச்செழுமை பண்பாட்டைக் கொண்ட கூத்து எனும் கலைவடிவம் சமூகத்தின் பல்துறை போற்றும் முதுசமாக தனித்துவம் பேணப்படுகின்றது.

கூத்து ஓர் அரியம் போன்றது பல்கோணத்தில் பரிணமிக்கும் திறன் வாய்ந்தது. அரியத்தின் பல வர்ணங்களில் ஒரு வர்ணத்தை தனியே காண்பது போல ஒரு பண்பினை இக்கட்டுரையில் அணுக முற்படுகின்றேன். கலைஞர் பார்வையாளர் எனும் தன்மைகழூடே கூத்தினை கண்ணுறலாமென எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கையின் பாகமெங்கனும் கூத்துக்கலை பரவலாக ஆடப்பட்டு வருகின்றது. மலையகப் பகுதிகளில் காமன்கூத்து, அருச்சுணன்தபசு, பொன்னர் சங்கர், மன்னார் பகுதிகளில் வடபாங்கு, தென்பாங்கு யாழ்ப்பாணத்தில் வடமோடி, தென்மோடி மட்டக்களப்பு பகுதிகளில் வடமோடி, தென்மோடி, வசந்தன், மகிடி கூத்துக்கள் இடம் பெறுகின்றன. மட்டக்களப்பு, யாழ்ப்பாண வடமோடி, தென்மோடிகளுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.



கூத்துக்களரிக்குரிய வழிபாடு நிறைவுபெற கூத்து ஆரம்பமாகும். இருள் கவ்விய பொழுதில் அண்ணாவியாரின் மத்தள ஒலி கூத்து ஆட்டம் இடம்பெறும் கட்டியத்தை எண்டிசை ஊருக்கும் பறை சாற்றி நிற்க தனக்கான ஒப்பனை தளத்தில் இருந்து எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் களரியின் நுழைவாயிலுக்கு வந்து தனது வரவினை இயம்புவான். இத்தருணத்தில் அக்கலைஞருக்கு காசுமாலைகள், சால்வை அணிவிப்பார்கள் இப்போது கடலை மாலை, பிளாஸ்டிக்கு பூமாலை, கச்சான் மாலை, பலூன் மாலை, டொபி மாலைகளும் என அணிவித்து கலைஞரை மகிழ்விப்பதன் ஊடாக தானும் மகிழ்வடைகிறான். சிலர் ஆடிக்கொண்டிருக்கும் போது கௌரவிப்பதும் உண்டு, இத்தருணத்தில் எல்லோராலும் அணிவிக்க முடியாது ஏனெனில் அவரின் ஆட்டத்தை சிதைக்காமல் அணிவிப்பது சிலருக்கே உரிய நுணுக்கம் பிரதான பாத்திரமெனின் 10-15 நிமிடங்கள் வரை இந்நிகழ்வு இடம் பெறும் அண்ணாவிமார் மத்தள இசை, வேறு சிலர் கூத்துப்பாடலுடன் மத்தள இசையை இணைத்தும் வாசிப்பதும் உண்டு. இது அவரவரின் எண்ணத்தைப் பொறுத்ததாக அமைகிறது.

பாத்திர வரவின் போது மத்தாப்பூ, சீனாவெடி கொழுத்தியும் தம் ஆதரவின் மகிழ்வை வெளிப்படுத்துவர். சில பாத்திரங்கள் நள்ளிரவில் வரவினை வேண்டி நிற்கும் அவ்வேளையில் சிறுவர்கள்கூட தனது தந்தை, சகோதரன், மாமா, பெரியப்பா, சித்தப்பா இது போல் நண்பனின் உறவினர்களுக்காக நண்பர்களோடு சிறுவயதில் துயிலுக்கு கையசைத்து வெடிகளை கொழுத்துவதற்காக திரித்து வைத்த வெடியுடன் ஒருவனும், தளல் அணையாது தன் மூச்சுக்காற்றினால் உயிர் கொடுத்தும் நண்பனுக்காக காத்திருப்பும் உறவுப்பிணைப்பினை வன்மைப் படுத்துகின்றது.

கொண்டாட்டங்களுக்குச் செல்வது போல புத்தாடை அணிந்து வருவதும் (சிறப்பாக பெண்கள்) சாதாரண நிகழ்வினை காண்பது போல வீட்டில் இருந்த நிகழ்வினை காண்பது வீட்டில் இருந்த உடையுடனும் வருகை தருவர் வந்திருப்போரில் ஒரு தொகையினர் கூத்தில் ஆடுகின்ற கலைஞர் தான் இந்த கூத்தில் இந்த பாத்திரத்தில் தான் ஆடுவதாக அழைப்பிதழ்களை வீடு வீடாக சென்று தன் வீட்டு சுபநிகழ்வுக்கு வருமாறு அழைப்பது போல அழைத்தோரும் அடங்குவர். இவர்களுள் சுபகாரியத்தில் அன்பளிப்பு கொடுத்து வாழ்த்துவது போன்று கூத்தில் ஆடும் கலைஞர்களுக்கு அன்பளிப்பாக மாலைகள், காசுகள், சால்வைகளை கையளித்து மகிழ்விப்பார்கள்.

இந்நிகழ்வினை காண வந்திருப்போர் கூத்து ஆரம்பமாவதற்கு முன்னதாக வந்து தமக்கும் தமது உறவினர்களுக்கும் முன்னிடத்தினை பிடித்து வைத்திருப்பர். சிலர் உரிய நேரத்தில் (ஆரம்பமாகும் போது) வந்து அமர்ந்து கொள்வர். இங்கு குடும்பமாகவும், வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து நீண்ட நாட்களின் பின் சந்தித்த உணர்ச்சிகளை கட்டித்தழுவி ஆர்ப்பரிப்பதும், முன்னைய நினைவுகளை அசை போடுவதும், சுகநலன்கள் விசாரிப்பதுமாக இக்களத்தினை அவரவர் தமக்கு ஏற்றாற் போல பயன்படுத்திக் கொள்வது மனமகிழ்ச்சினையும், புத்துணர்வினையும் ஊட்டுகின்றது. விசேடமாக நகர்புற மக்களுக்கு ஆறுதலளிக்கும் அருமருந்தும் களமென்றாலும் மிகையாகாது.

வருகின்ற மக்கள் வருகின்ற போது தமது தேவைக்கு ஏற்ப பாய், சாக்கு, படங்கு என்பனவற்றைக் கொண்டு வந்து சூடு மிதித்து அடுத்த நெல் விதைப்புக்காக ஒய்வெடுக்கும் நிலத்தின் மேல் அவற்றை விரித்து அந்நிகழ்வு முடியும் வரை தாமே சொந்தக்காரர் ஆகிவிடுவர். சிலர் வரம்புகளை தமது தலையணைகளாக வைத்து விடுவர். இவர்கள் தமது கடின, இலகு தன்மைகளுக்கேற்ப எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இருந்து, நின்று நித்திரை நிலையில் என தாம் கொண்டு வந்த திண்பண்டங்களுக்கு வேலை கொடுத்தபடி இருப்பதுண்டு.

சிலர் தாம் வரும் போது தம்மால் இயன்ற சில பொருட்களை தயாரித்து வந்து அவ்விடத்திலேயே சிறிய வியாபாரம் ஒன்றினை செய்தபடி கூத்தினைக் கண்டுகளிப்பர். இவ்வியாபாரங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளோ, தடைகளோ, வரிப்பணங்களோ இல்லை.

கூத்துக்கலை இதிகாசக்கதைகளையே பாடு பொருளாகக் கொண்டு தொடராற்றுகை செய்து வருவதானால் இதில் வரும் பாடல்களும், ஆடல்களும் சிலரே தொடர்ந்து ஒரே பாத்திரத்தை ஆடி வருவதால் அவர்களின் ஆற்றுகை முறைமை என்பன பரீட்சயமாக இருப்பதனால் உறங்கிவிடுவதும் தமக்கு விரும்பிய இடங்களை மட்டும் இரசிப்பது இவர்களின் சுதந்திர ரசனை. இது இவற்றுக்கே உரித்தான சிறப்பு எனலாம்.

கூத்தில் அனேகருக்கு ரசனை அளிப்பதாக பாத்திர வரவுகளே காணப்படுகின்றன. பறையன், செட்டி, வேடன் போன்ற பாத்திரங்களின் வரவு ஆட்டங்கள் வேகத்தையும் விறுவிறுப்பையும் தருகின்றன.

மறுபுறம் இத்தகைய பாத்திர விபரிப்புக்கள் வழி அடிநிலை மக்களை இழிவுபடுத்துவதையும் கூத்துக்களில் அவதானிக்க முடிகின்றன. எனினும் எல்லாப் பாத்திரங்களையும் கௌரவமிக்கதாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தியலும் அண்மைக் கால கூத்தாற்றுகைகள் வழி உணரமுடிகின்றது. இன்றைய சூழலில் முன்னர் இடம்பெற்ற தாழ்வுப்படுத்தல்கள் குறைந்து வந்திருப்பது வரவேற்கக் கூடியதாக இருக்கின்றது.

கூத்தில் வரும் ஒவ்வொரு பாத்திர வகைகளுக்கும் விதம்விதமான தாளக்கட்டுக்களும் பாடல்களும் இடம் பெறும். சில ஆடல்களும் அவர்தம் வரவின் விறுவிறுப்பினையும், உற்சாகத்தினையும் உண்டு பண்ணுவது இத்தன்மையான பாத்திரங்களே! இதனாலேயே நித்திரை வருகின்ற சாம நேரத்தில் இவர்களின் வருகையால் நித்திரை மறந்து விடும். நகைச்சுவை ததும்பும் சிரிப்பொலிகளே எழும், இவர்கள் வரும் போது தன்னை எழுப்பி விட வேண்டும் என உறங்கும் சிறுவர்களை பெற்றோர் எழுப்பிவிடும்போது இமை மூடாது தமது அனுபவத்திற்கேற்ப ரசித்து உள்ளீர்த்துக் கொள்வர்.

மக்களுக்கு இது வழமையான கதை என்பதால் அடுத்து நிகழவிருக்கும் நிகழ்வின் கோர்வையினை பார்ப்போரே கூறுவதும், பாடல்களை தாமும் சேர்ந்;தும்பாடி பங்காளராவர்.

புதியவர்களுக்கு கதையின் சாராம்சத்தை ஆற்றுகையின் விபரிப்புடன் சிறிய டெய்லரையே நிகழ்த்தி முடித்து விடுவர். ஆற்றுகை நடைபெறும் போது இடம் பெறும் தவறுகளை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் இது பிழை, இதுக்கு அடுத்தது இந்த பாட்டு வரும் என கூறுவதும் அதனை கேட்டு சீர் செய்து கொண்டு ஆடப்படுவது எவ்வரங்கிலும் இல்லாத தனித்துவம்.

ஒரு பாத்திரத்தை நீண்ட காலமாக தரிசித்து வந்த பார்வையாளர் பாத்திரங்களில் வேடமேற்று ஆடும் புதிய கலைஞர்களின் ஆற்றுகையை முந்தயை கலைஞர்களுடன் ஒப்பிட்டு அவனை விட நல்லா இருக்கு, கொஞ்சம் காணாது, 'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?','நட்டுவான் பிள்ளைக்கு நொட்டியே காட்ட வேணும்' என்று தமது அனுபவத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப விமர்சனம் செய்து விமர்சனத்துடன் அதனை ஏற்றுக்கொள்ளும் தன்மையை இங்கு காணமுடிகிறது.


இக்கதைகள் வாய்மை, நெறி தவறாமை, போன்ற அறக்கருத்துக்கள் சார்ந்தவை. அறம் தவறும் போது அழிவு, துன்பங்கள் என்பன இடம்பெறும் என அதை பார்க்கும் சிறுவர்களுக்கு அறிவினையும் நற்பண்பினையும் பெற்றோர் சொல்லிக் கொடுப்பதுண்டு.

கூத்துக் கலைஞன் ஆடிக் கொண்டு இருக்கும் போது அவனுக்கு பாராட்டுக்களும், அன்பளிப்புகளும் வழங்கப்படும் போது அதனை பெரிதும் மனம் கொள்ளாது தனது பணியில் குறியாக இருக்கும் போது அவனின் அசௌகரியத்தை உணர்ந்து அவர் மீது உள்ள மாலைகளை களற்றி அவரது குடும்பத்தாருக்கு கொண்டு போய் சேர்ப்பார் இதனை யாரும் அவருக்கு சொல்வதில்லை. இது ஒரு புரிந்துணர்வின் தன்மைதான்.

நீண்ட நேரம் ஆற்றுகை செய்வதால் கலைஞர்கள் இழைத்து விடும் போது அவர்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தல், சலங்கைகள் தளரும் போது அதனை சீர் செய்து விடுதல் என சிறியவர்க்கும் பெரியவர்கள் உதவுதல் என்று அவர்கள் அவர்களை ஆதரிப்பது விசேடமாக கூத்து நடைபெறும் இடத்தில் சிலர் ஒன்று கூடி, அல்லது தனியாகவோ அவர்களுக்கு உணவு, தேநீர் வசதிகளை வழங்குதல் சமூகப்பண்பாட்டின் போற்றற்  பண்பாகும்.

தனது ஆற்றுகைப்பகுதி நிறைவு பெற்றதும் அடுத்த ஆற்றுகை வரும் வரை தனது குடும்பம், நண்பர், உறவினருடன் தானும் ஒருவனாக கலந்து அவர்கள் கொண்டு வரும் உணவை அம்மா ஊட்டிவிடுவதும் சில தருணம் உறங்குவதும் அல்லது அவர்களுடன் இருந்து சில புதிய கலைஞர்கள் ஆற்றுகை செய்யும் போது கூத்து ஒத்திகையின் போது விடும் தவறுகள், அங்கு நடைபெறும் சுவாரஷ்யமான சம்பவங்களை கூறி மகிழ்ந்திருத்தல் போன்ற சில உத்திகள் நவீன அரங்கின் சிலவற்றில் காணவும் முடிகிறது.

ஒரு கிராமத்தில் கூத்து நடைபெறும் போது அயல் கிராம கூத்துக்கலைஞர்கள் தாமும் அவர்களுக்கு ஒப்பனை செய்தல், சல்லாரி போடுதல் என தம் பங்களிப்பு வழங்குவர். அயல் கிராம அண்ணாவியார் வரும் போது அவரை அழைத்து மத்தளம் வாசிக்கக் கொடுத்து அவரை கௌரவிப்பது மத்தளத்தை பொறுப்பேற்ற அண்ணாவியார் தன் வித்துவத்தை களரியில் காட்ட முனைவதும் ஒரு போதும் ஒத்திகைக்கு வராதவர் அதே தாளத்திற்கு வாசிப்பது மரபுக்கையளிப்பின் புதுமை என்றே கூறலாம்.

களரியில் சபையோர், மத்தளம், சல்லாரி, பிற்பாட்டுப்பாடுவோர், ஏடு பார்ப்போர், கொப்பி பார்ப்போர் ஒரு குழு ஆற்றுகைக்கு பங்களிப்பு செய்வர். இவர்கள் நீண்ட நேரம் தமது பங்களிப்பினை வழங்கி களைத்துப் போகும் வேளை அவர்களின் நிலை அறிந்து களரிக்கு வெளியில் நிற்கும் கலைஞர்கள், தமது ஆற்றுகை நிறைவு பெற்ற கூத்தர்கள் ஆற்றுகையினை சிதைக்காது நுணுக்கமாக பொறுப்பேற்று முன்னர் செயற்பட்டோருக்கு ஓய்வு கொடுப்பது இச் செயற்பாட்டின் எழுதப்படாத தொடராக சுழற்சி முறையில் இடம் பெறும்.

முன்னைய நாள் இரவு ஆரம்பமாகி மறுநாள் காலை வரை கிட்டத்தட்ட 8-10 மணித்தியாலங்கள் இடம் பெறும். இங்குள்ள பாரப்போர் உடல் உழைப்பினை பிரதான மூலதனமாக கொண்டவர்கள். வேலை செய்த களைப்பில் குறித்த நேரத்தின் பின் உறங்கிவிடுவதும் மறுநாள் வேலைக்குச் செல்ல வேண்டும் என உறங்குவதும் உண்டு. சில கூத்துக்கள் நீண்ட கால நீடிப்பினைக் கொண்டது. பார்ப்போரின் ரசனை, நேரத்தினுடைய தேவை கருதி அண்ணாவியார் கூத்தில் கருத்துச் சிதைவு ஏற்படாத வண்ணம் பாடல், ஆடல்களை குறைத்து வழங்குவது ஆச்சரியமான கலைத்துவம்.


ஆற்றுகைக் கலைஞன் பார்ப்போன் பேதங்கள் தத்தமது இடங்களில் இருக்கும் போதே! அது ஒரு கலையாக காணமுடிகின்றது. அதற்கும் அப்பால் நுண்ணிய பங்களிப்பினை கலைஞர் அல்லாதோர் சிறியவர் முதல் பெரியவர் வரை வழங்குவர். இது ஒரு தனித்த மனிதருக்;கு உரித்தான ஒன்று அல்ல என்பது புலப்படுகிறது. இது குறித்த சமூகத்தின் திருவிழா என்றே கூற முடியும். ஏனென்றால் குறித்தவொரு சமூகம் தம திறனுக்கு ஏற்ப கட்டமைத்துக் கொண்ட ஒரு கலை வடிவமாகும். தன் சமூகம் மட்டுமன்றி வேறு சமூகங்களும் பங்களிப்பு செய்கின்ற விதம் என்பனவெல்லாம் சமூக நன்னெறிகளை விளக்கி நிற்கின்றது என்பதனை ஆரம்பம் தொட்டு இறுதி வரையான தொடர்கள் கூறி நிற்பதிலிருந்து உணர முடிகின்றது.

சுயநலமற்ற செயல், ஒற்றுமை, கூடிவாழ்தல், நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, கொண்டாட்டம், நட்பு, உறவு எனத் தொடரும் நன்மையானவை கிராமிய சூழலிலும் அவர்களின் கலைச் செயற்பாடுகளிலும் வெறுமனே ஏட்டில் எழுதப்பட்ட ஒரு வடிவத்தில் எழுதப்படாத செயலாக இடம் பெற்று வருவது அவர்களின் மேன்மையை உணர்த்துகிறது. மறுபுறம் நகர்புற மக்களும் இவற்றைக் காண கிராமியச் சூழலுக்கு பயணமாவதும் தொடர்கிறது. இது கூத்தரங்கினதும் மக்களது வாழ்வியலினதும் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகின்றது, உறுதிப்படுத்துகின்றது எனலாம்.
        

சி.துஜான்
4ம்வருடம்,
நடனநாடகத்துறை,
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக