வியாழன், 4 பிப்ரவரி, 2010

இரும்புக் கம்பியால் தாக்கி மனைவி, மாமியார், அவரின் சகோதரி ஆகியோரை படுகொலை செய்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது - நெல்லுக்குளம் பகுதியில் சம்பவம்..!!

மனைவி, மாமியார், அவரின் சகோதரி ஆகியோரை படுகொலை செய்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது தனது மனைவி, மாமியார் அவருடைய சகோதரி ஆகிய வரையும் இரும்புக் கம்பியால் தாக்கிப் படுகொலை செய்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது படுகாயமடைந்த படுகொலைச் சந்தேக நபரின் மாமனார் ஒருவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சம்பவத்தில் ரீ.பீ.அனுலாவதி (வயது 50), ரீ.பீ.பத்மினி (வயது 40) மற்றும் சகீலா ஹன்சமாலி ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவே இந்த படுகொலைச் சம்பவத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஐ.எம்.கருணாரத்ன தகவல் தருகையில் கூறியதாவது : நேற்று முன்தினம் நள்ளிரவு 12.05 மணியளவிலேயே இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்து. சம்பவத்தின் போது சந்தேக நபர் உட்பட ஐந்து பேர் குறித்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கிடையில் வாக்குவாதமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே கோபமடைந்த சந்தேக நபர் அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து ஏனையோர் மீது பலமாகத் தாக்கியுள்ளார்.
சம்பவத்தின் போது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் பலரும் சம்பவ இடத்துக்கு வந்து கூடினர். இருப்பினும் அவர்கள் அங்கு வருவதற்குள் சந்தேக நபரின் மனைவி உட்பட ன்று பெண்களும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சந்தேகநபரின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த அவருடைய மாமனார் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் தாக்குதலுக்குப் பயன்படுத்திய இரும்புக் கம்பியினையும் கைப்பற்றினர்.
இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரான நலீன் சஞ்ஜீவ என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக