சனி, 21 நவம்பர், 2009

புலிகளுக்கு தகவல் வழங்கி ஊதியம் பெற்றுவந்த ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் கைது...

புலிகள் அமைப்பிற்குத் தகவல்களை வழங்கி மற்றும் உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியதுடன் மாதாந்தம் ஊதியத்தைப் பெற்றுவந்தார் எனக் கூறப் படும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிற்கு அருகிலுள்ள பிரதேசமொன்றில் வசித்துவரும் இந்த சிங்கள இனத்தவரான இராணுவமேஜர், தாம் பணியாற்றிய காலத்தில் மாத்திரமல்லாது ஓய்வுபெற்ற பின்னரும் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றிய இவர், இராணுவப் புலனாய்வுப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். இவர் பாதுகாப்பு உயரதிகாரிகள் மற்றும் தென்பகுதியிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த தகவல்களை புலிகளுக்கு வழங்கியுள்ளதுடன் இதற்காக மாதாந்தம் லட்சக் கணக்கில் பணத்தைப் பெற்று வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி குறித்து கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புலிகளால் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ அதிகாரிகளின் கொலைகளுடன் இவர் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின்பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக