வியாழன், 4 பிப்ரவரி, 2010

இலங்கையின் 62வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் கண்டி மாநகரில் வெகுசிறப்பாக இடம்பெற்றது (புகைப்படங்கள் இணைப்பு)!

பயங்கரவாதம் முற்றாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை தனது 62ஆவது சுதந்திரதினத்தை இன்று வெகு சிறப்பாக கொண்டாடியது. சுதந்திரதினத்தின் பிரதான நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி தலதாமாளிகை வளாகத்தில் இன்று நடைபெற்றன. பயங்கரவாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது சுதந்திரதின நிகழ்வு இதுவென்பது முக்கியமானது. காலை 8.50 மணிக்கு ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றினார். இதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் மரியாதையின் நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இதன் பின்னர் 9.15 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுமக்களுக்கு சுதந்திரதின உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையின் இடையே தமிழ் மொழியிலும் உரையாற்றியமை விசேட அம்சமாகும். இதனைத் தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் காலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் சபாநாயகர் அமைச்சர்கள் பிரதம நீதியரசர் ஆளுநர்கள் முதலமைச்சர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் ராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்களுமாக சுமார் இரண்டாயிரம் சிறப்பு விருந்தினர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன. சுமார் பத்தாயிரம் பொலிஸாரும் முப்படையினரும் அங்கு விசேட பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக