செவ்வாய், 12 ஜனவரி, 2010

தமிழ்மக்களின் நலனுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் முடிவுகளை எடுத்தது கிடையாது -அமைச்சர் டக்ளஸ்

தமிழ்மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் முடிவுகளை எடுத்தது கிடையாது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்று கையில், நான் யாழ்ப்பாணத்தில் ஒன்றும், கொழும்பில் ஒன்றும் கதைப்பவனல்ல. உங்களோடு கதைப்பதையே கொழும்பிலும் கதைக்கின்றேன். ஏ-9வீதியை முடியது யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வீதி முடப்பட்டதால் கடல்மார்க்கமாக உங்களுக்கு உணவும், மருத்துப் பொருட்களும் தொடராக அனுப்பியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவர் அன்று அவ்வாறு நடவடிக்கை எடுத்திராவிட்டால் நாம் பட்டினியால் தான் மடிந்திருப்போம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்காக பல தசாப்தங்கள் ஆதரவு நல்கியுள்ளார். அவர் ஒரு மனிதபிமானம் மிக்க ஜனநாயகவாதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரும்பி இருந்தால் அழிவுகளை தவிர்த்து பிரச்சினைகளை அன்றே தீர்திருக்கலாம். ஆனால் அவர்கள் அன்று புலிகளின் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்கள். அழிவுகளுக்குத் துணை போனார்கள். அவர்கள் தமிழர்களின் நலனைக் கருதி ஒருபோதும் செயற்பட்டதில்லை. நாம் ஒருபோதும் அவர்கள் போன்று செயற்பட்டவர்கள் அல்லர். சரத் பொன்சேகா ஜனநாயகம் தொடர்பாக பேசினாலும் அவரிடம் அது குறித்த அனுபவம் கிடையாது. அவர் இராணுவ மனப்பான்மை மிக்கவர். இப்படியான ஒருவருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க முடியாது. ஆகவே, இன மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அமோக வெற்றியீட்டுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக