சனி, 21 நவம்பர், 2009

முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை விடுவிக்க அமெரிக்கா இந்தியாவிடம் வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை...

வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இலங்கையில் இராணுவத்தால் நடத்தப்படும் முட்கம்பி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அகதிகளின் விடுதலைக்கு உடன் வழிசெய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கட்டாயம் வலியுறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை நேற்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட அழைப்பின்பேரில் எதிர்வரும் நாள்களில் வெள்ளைமாளிகைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இச்சந்திப்பின்போது இரு தலைவர்களும் சர்வதேச சமகால அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசவிருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே இலங்கையின் முகாம் அகதிகளின் விடுதலைக்கு உடன் வழிசெய்யவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்க கிளைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் லாரி கொக்ஸ் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் அகதிகள் ஆறு மாதங்களுக்கு இடையில் முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்படுவர் என்று இலங்கை அரசு இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால், அந்த ஆறு மாதகால அவகாசம் முடிந்துவிட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னமும் அங்கு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் அடங்கலாக சுமார் 12ஆயிரம் பொதுமக்கள் புலிச்சந்தேகநபர்கள் என்ற பேரில் இராணுவத்தால் அகதிகளின் முகாம்களில் புறம்பாகப் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினர்கள் இப்புலிச் சந்தேக நபர்களைச் சந்திப்பதற்கு அனுமதி இல்லை. இப்புலிச்சந்தேக நபர்கள் அவர்களின் சார்பில் வாதாடுவதற்கு சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பெறுவதற்கும் அனுமதியில்லை. அமெரிக்க ஜனாதிபதி இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது இந்த இலங்கைத் தமிழ்அகதிகளின் பிரச்சினைக்கு உடன்தீர்வு காணுமாறு இந்தியாவை வலியுறுத்தவேண்டும். அமெரிக்க ஜனாதிபதி இந்த அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது. இலங்கை அரசு இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்தபடி ஆறுமாத காலத்துக்குள் அகதிகளை இன்னமும் மீள்குடியேற்றவில்லை என்பதை அமெரிக்கா இந்தியாவுக்கு ஞாபகப்படுத்தவேண்டும். எனவே, இலங்கை அரசு இந்தியாவுக்கு வழங்கிய மேற்படி வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டமை தொடர்பில் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இந்தியப் பிரதமரை அமெரிக்க ஜனாதிபதி உற்சாகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக