சனி, 21 நவம்பர், 2009

சுவிஸ் கூட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு தமிழ், முஸ்லிம் கட்சிகள் பொதுஉடன்பாடு ஒன்றின்கீழ் ஒன்றுபட்டுச் செயற்படுவது குறித்து ஆராய்வு..

சுவிற்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கூட்டத்தின் ஆரம்ப நாளான வியாழக்கிழமை கூட்டத்தில் பங்குபற்றிய தலைவர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களும் தங்களுக்கிடையில் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று ஆரம்பமான கூட்டத்தில், இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலில் ஆராயப்பட்டது. அத்துடன் சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் விடயங்களில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் பொதுஉடன்பாடு ஒன்றின்கீழ் ஒன்றுபட்டுச் செயற்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களைக் கோருதல் மற்றும் அரசியல் கைதிகள், சரணடைந்த போராளிகள் ஆகியோருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு அரசைக் கோருவது தொடர்பாகவும் பொது இணக்கப்பாட்டுக்கு அறிக்கையைத் தயாரிப்பது குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இக் கூட்டத்தின் இறுதிநாள் இன்றாகும். இந்தக் கூட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்க்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலர் ஹசன் அலி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஆறுமுகம் தொண்டமான், அமைச்சர் ரிசாத் பதியுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கு பற்றியுள்ளனர். இது இவ்விதமிருக்க கிழக்கு மாகாண முதல்வர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாணசபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்குடன் நேற்றையதினமே தனது கூட்டத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் (சுகு) ஆகியோர் சுவிஸில் கூட்டங்களை ஏற்பாடு செய்து தமது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து வருவதாகவும் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக