வெள்ளி, 13 நவம்பர், 2009

78 இலங்கையர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு அவுஸ்திரேலியா கொள்கை அளவில் இணக்கம்

இந்தோனேஷியா கடலில் கடந்த 25 நாள்களாக அந்தரித்துக்கொண்டிருக்கும் 78 இலங்கையர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு அவுஸ்திரேலியா கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயன்றபோது இந்தோனேஷிய கடலில்வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் கடந்த நான்குவார காலத்துக்கும் மேலாக இந்தோனேஷிய கடலில் அவுஸ்திரேலியாவின் சுங்கக் கப்பலான ஓசியானிக் வைகிங் இல் உள்ளனர். அவுஸ்திரேலியாவில் அரசில் தஞ்சம் கிடைக்கும்வரை கப்பலைவிட்டு ஓரடிகூட வெளியில் எடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர்கள் உடும்புப்பிடியாக இருக்கின்றனர். இவர்களின் எந்தவொரு தந்திரோபாய நடவடிக்கைகளுக்கும் அசைந்து கொடுக்கப் போவதில்லை என்று இதுநாள்வரை அவுஸ்திரேலிய அரசு கடும்போக்கை கடைப்பிடித்து வந்துள்ளது. ஆனால், உள்நாட்டு, அரசியற்கட்சிகள் ஊடகங்கள் பொதுமக்கள் ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாகவும், சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாகவும், ஏனைய நாடுகள் இந்த இலங்கையர்களைப் பொறுப்பேற்கத் தயங்குவதாலும் அவுஸ்திரேலியாவின் கடும் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இலங்கையர்களுக்கு அரசியற்தஞ்சம் வழங்க ஆஸி கொள்கையளவில் இணங்கியுள்ளது என்று தெரியவருகிறது. அரசியற் தஞ்சம்பெற உரித்தானவர்கள் எதிர்வரும் 12வாரங்களுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் அரசியற் தஞ்சம் பெறுவர் என்று ஆஸி. பிரதமர் கெவின்ருட் சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு எழுத்துமூல வாக்குறுதி வழங்கியுள்ளார். இவர்களில் அரசியற் தஞ்சம்பெற உரித்தானவர்கள் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் 30பேருக்கு எதிர்வரும் 4 வாரங்களுக்கிடையில் ஆஸியில் அரசியற் தஞ்சம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக