புதன், 16 செப்டம்பர், 2009

இடைத்தங்கல் முகாமில் இருந்த புலிகளை காப்பாற்றி பணம் சேகரித்த ஈரோஸ் உறுப்பினர்கள் கைது!

வவுனியா செட்டிகுளம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுடன் மக்களாக பதுங்கியிருந்த புலிகளை காப்பாற்றிய ஈரோஸ் இயக்கத்தினர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியிருந்த புலிகளை 5 இலட்சம், 10 இலட்சம், மூன்று இலட்சம் என்று புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு முகாம்களில் பதுங்கியுள்ள புலிகளை காப்பாற்றும் பணியில் ஈரோஸ் இயக்கத்தினர் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருவது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.இன்றையதினம் வவுனியா குருமண்காடு பகுதியில் அமைந்துள்ள ஈரோஸ் காரியாலயத்தில் வைத்து இடைத்தங்கல் முகாமில் இருந்து கடத்திவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து மேலும் நால்வர் செட்டிகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குருமண்காடு காரியாலயத்தின் ஈரோஸ் தலைவர் தற்போது தலைமறைவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் ஒருவரை வெளியே கொண்டுவருவதற்காக 3 இலட்சம் ரூபான என்ற வீதத்தில் இரண்டு பேரிடம் 6 இலட்சம் ரூபாவை ஈரோஸ் இயக்கம் பெற்றுள்ளது. வவுனியாவில் இடம்பெறும் களவு, கொள்ளை, கப்பம், வரி வசூலிப்பு என்று பல்வேறு விதத்தில் தமிழ்மக்களை சுறண்டி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈரோஸ் இயக்கம் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோஸ் இயக்கத்தினரின் துணையுடனேயே புலிகளின் பாப்பா, தீபன், திருநாவுக்கரசு போன்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் வெளியே தப்பியோடியுள்ளதாகவும், இதனை தொடர்ந்து இடைத்தங்கல் முகாம் மக்கள் ஈரோஸ் இயக்கத்தினர் மீது விசனமடைந்துள்ளதுடன், எதுவுமே குற்றம் செய்யாத நாங்கள் முகாம்களில் வாட வன்னியில் எம்மை துண்புறுத்தியும், எமது பிள்ளைகளை பலிக்கடாவாக்கியும் குற்றவாளிகளாக்கியும் வந்த புலிகளை தண்டனையில் இருந்து பாதுகாத்து வரும் ஈரோஸ் இயக்கத்தினர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதுடன் இவ்வாறானவர்கள் இனிமேல் இந்த பக்கம் வரட்டுக்கும் என்ற ஆதங்கத்தில் இருக்கின்றனர்.
முகாம்களில் இருந்த புலிகளை காப்பாற்றி பணம் சேகரிப்பது இதுவரை யார் என்று தெரியாமல் பலர் மீதும் சந்தேகம் கொண்ட எமக்கு இன்றுதான் உண்மை தெரிந்துள்ளது. இனிமேல் இந்த முகாமுக்குள் ஈரோஸ் இயக்கத்தினர் வரட்டும் நாம் அவற்றை கவனித்து கொள்கின்றோம் என்று, புலிகளிடம் பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர் ஆதங்கப்பட்டதை காணமுடிந்தது. இடைத்தங்கல் முகாமில் இருந்து 10,000க்கு மேற்பட்டோர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கணிசமானவர்கள் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஆவர், இவர்களை இந்த ஈரோஸ் இயக்கத்தினரே கடத்திச்சென்று வெளியேற்றி பணம் சம்பாதித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
-வவுனியா நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக