புதன், 23 செப்டம்பர், 2009

யாழ்குடாவில் கடற்றொழில் விவசாயத்துக்குப் புத்துயிர்

கடற்றொழிலாளர்களும் பயிர்ச் செய்கையாளர்களும் தற்போது போதிய வருமானம் பெறத் தொடங்கியுள்ளனர். உள்ளூர் உற்பத்திகளை குடாநாட்டுக்கு வெளியே அனுப்ப முடியாமல் இவர்கள் நீண்ட காலமாக வருமானத்தை இழந்தி ருந்தனர். யாழ்குடாவுக்கும் தென்னிலங்கைக்கும் இடையிலான தரைவழிப் பொருள் போக்குவரத்து இப்போது படிப்படியாக ஆரம்பிக்கப்படுவதனாலேயே வட பகுதி உற்பத்தியாளர்கள் வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.
யாழ்குடாநாட்டு மக்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தருகின்ற பிரதான தொழில் துறைகளாக மீன்பிடித் தொழிலும் விவசாயமும் விளங்குகின்றன. ஆனாலும் கடந்த சுமார் இருபத்தைந்து வருட காலமாக இவ்விரு பிரதான தொழில் துறைகளும் யாழ்குடாவில் வீழ்ச்சியடைந்தே காணப்பட்டன.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு யாழ்குடாநாட்டில் கடல் வலயத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக மீன்பிடித் தொழில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் அங்கு பிடிக்கப்பட்ட மீன்களை வெளியிடங்களுக்கு அனுப்ப முடியாமல் உள்ளூரில் மட்டுமே சந்தைப்படுத்த முடிந்தது. கடற்றொழிலாளர்களால் குறைந்த விலையிலேயே உள்ளூரில் மீன்களை விற்க முடிந்ததால் அவர்களது வருமானம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவிதமான பாதிப்பு விவசாயச் செய்கையிலும் எதிர்நோக்கப்பட்டது. மரக்கறி மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கைக்குப் புகழ்பெற்றிருந்த வட பகுதியில் பசளை, கிருமிநாசினி, களைநாசினி ஆகிய எதனையுமே பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை அன்றிருந்தது. விதைபொருட் களும் யாழ். விவசாயிகளுக்குக் கிடைக்காமலிருந்தன. அவர்களின் விவசாய உற்பத்திப் பொருட்களை தென்பகுதிக்கு அனுப்ப வழியிருக்கவில்லை. இதன் காரணமாக விவசாயச் செய்கைக்கென முதலீடு செய்த பணத்தைக்கூட மீளப் பெற்றுக் கொள்ள முடியாத பரிதாப நிலைமை அவ்விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
யாழ்குடா கடற்றொழிலாளர்களும் விவசாயிகளும் தற்போது படிப்படியாக வருமானம் ஈட்டத் தொடங்கியிருப்பதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. யாழ் குடாவில் பிடிக்கப்படும் கடலுணவுகள் அங்கிருந்து குளிரூட்டி வாகனங்கள் மூலம் தென் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் தற்போது கூடுதல் வருமானம் பெறத் தொடங்கியுள்ளனர். கடலில் மீன்பிடிப்பதற்கான கெடுபிடிகளும் தற்போது அங்கில்லை. விவசாயிகளைப் பொறுத்த வரை அவர்களுக்குப் புதுவாழ்வு கிடைத்துள்ளதென்றே கூற வேண்டியுள்ளது.
விவசாயச் செய்கையிலும் விவசாயிகள் மத்தியில் புதிய உற்சாகமொன்று பிறந்துள்ளது. விவசாயத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வட பகுதியில் இப்போது தாராளமாகக் கிடைப்பதனாலும் விவசாய உற்பத்திப் பொருட்களை வெளியிடங்களுக்குச் சந்தைப்படுத்தக் கூடியதாக இருப்பதாலுமே விவசாயிகள் தற்போது பயனடையத் தொடங்கியுள்ளனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வடபகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து உருவான அனுகூலமான சூழ்நிலையே இவற்றுக்குக் காரணமாகும்.இதே சமயம் வட பகுதி உற்பத்திப் பொருட்களை தரைமார்க்கமாக தென்பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென அங்குள்ள உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். இக்கோரிக்கை கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
வடக்கு மக்கள் சுயதொழில் மூலம் முன்னேறும் ஆற்றலுடையவர்கள். தொழில் புரிவதற்கான சூழலும் உரிய சந்தை வாய்ப்பும் தற்போது உருவாகியிருப்பதால் அவர்களது பொருளாதாரம் மீண்டும் முன்னேறுவதற்கான ஆரம்பம் இது வெனக் கூறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக