வியாழன், 31 டிசம்பர், 2009

சரத் பொன்சேகாவை விட, மகிந்த ராஜபக்சேவே தமிழர்களுக்கு நியாயம் வழங்குவதில் முனைவார்! - ‘துக்ளக்’ சோ..!!

தமிழகத்தில் வெளிவரும் பத்திரிகைகளில், திராவிட கழகங்களின் ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசடி என்பவற்றை கர்ணகடூரமாக விமர்சித்தும், கண்டித்தும் எழுதிவரும் ஒரே பத்திரிகை ‘துக்ளக்’தான். அதேபோல இலங்கை தமிழர் பிரச்சினையில் கழகங்கள் செய்யும் பாசாங்குதனங்களை அம்பலமாக்குவதும் ‘துக்ளக்’ மட்டுமே. அதுமாத்திரமின்றி, இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி ‘துக்ளக்’ எழுதிவரும் கருத்துக்கள் நிதானமாகவும், ஓரளவு சரியாகவும் இருந்து வந்துள்ளன. அதற்கு காரணம் அப்பத்திரிகையின் ஆசிரியராக பிரபல அரசியல் விமர்சகர் ‘சோ’ ராமசாமி இருப்பதுதான். ‘துக்ளக்’கில் வாராவாரம் இடம் பெறும் கேள்வி – பதில் பகுதி வாசகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் ஒரு பகுதியாகும். வாசகர்களின் கேள்விகளுக்கு சோ எப்பொழுதும் தர்க்கரீதியாகவும், சிந்தனையை தூண்டும் விதமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிப்பது வழமை. நமது வாசகர்களின் பயன் கருதி இவ்வாண்டின் இறுதி ‘துக்ளக்’ இதழில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக வாசகர் ஒருவர் கேட்ட கேள்வியையும், அதற்கு சோ அளித்த பதிலையும் கீழே தருகின்றோம். கேள்வி - இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கும், பொன்சேகாவுக்கும் நடக்கப் போகும் போட்டியில், யார் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது? யாருடைய வெற்றி இலங்கைத் தமிழர்களுக்கு ஓரளவாவது நன்மை பயக்கும்? பதில் - ராஜபக்சேவுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்பது என் கருத்து. தீவிர சிங்களவாதிகளான ஜே.வி.பி கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான யு.என்.பியும் பொன்சேகாவை ஆதரிக்கின்றன. இது வலுவான கூட்டணி தான். இத்துடன் தமிழர்களின் ஆதரவும் சேர்ந்தால், பொன்சேகாவுக்கு பலத்த ஆதரவு கிட்டும். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க, ஒரு ராணுவ அதிகாரியை முன்னிறுத்துகின்ற எதிர்க்கட்சிகளின் செயல் மக்களிடையே ஒரு எதிர்ப்பைத் தோற்றுவிக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் ராஜபக்சே வெற்றி பெறுவார் என்று எனக்குத் தோன்றுகிறது. தமிழர் நலனைப் பொறுத்தவரையில், பொன்சேகா இதுவரை மாற்றி மாற்றிப் பேசிவந்த கருத்துக்களில், தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள்தான் அதிகம். இப்போது அதில் அவர் அதில் மாற்றம் காட்டினாலும், மீண்டும் அக்கருத்துக்களையே அவர் தழுவக்கூடும். ராஜபக்சே இந்தியாவின் நெருக்குதல் காரணமாகவாவது, தமிழர்களுக்கு நியாயம் வழங்குவதில் முனைவார் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக