செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கோல்டன் கீ வைப்பிலிட்டோருக்கு பணத்தை மீளச் செலுத்த இணக்கம்..!!

‘கோல்டன் கீ’ நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களின் பணத்தை மீளச் செலுத்த செலிங்கோ குழுமம் எழுத்து மூலம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.
நீதிமன்றம் செல்லாமலேயே தம்மிடமுள்ள சொத்துக்களை விற்று பணத்தை திரும்பிச் செலுத்த செலிங்கோ குழுமத்தின் பொறுப்பாளர்கள் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கமைய புதிய அரசாங்கத்தின் நூறுநாட்களுக்குள் ‘கோல்டன் கீ’ நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்கள் தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

கோல்டன் கீ நிறுவனத்தால் ஏமாற்றமடைந்த அப்பாவி மக்களின் பணம் மீட்டுத்தரப்படுமென தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.


இதற்கமைய நீதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றுக் காலை கோல்டன் கீயில் வைப்புச்செய்தவர்களின் பிரதிநிதிகளை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே செலிங்கோ குழுமத்தின் இந்த இணக்கப்பாட்டினை தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை செலிங்கோ குழுமத்தின் பிரதிநிதிகள் மத்திய வங்கியின் ஆளுநரை சந்திப்பர். இதைத் தொடர்ந்து, வைப்பிலிட்டவர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான நடைமுறை அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக