வியாழன், 26 பிப்ரவரி, 2015

உள்நாட்டு விசாரணை குறித்து இன்னமும் முடிவில்லை இலங்கை நீதி அமைச்சர்..!!!

இலங்கையின் போர் குறித்த உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முடிவை இன்னமும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என்று இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ விஜயமாக லண்டன் வந்த இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பிபிசி சிங்கள சந்தேசியவுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு

முன்னைய அரசாங்கம் சர்வதேச சமூகம் திருப்திப்படக்கூடிய வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததினாலும், நியாயமான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளாததினாலும் ஐநா மனித உரிமைகள் பேரவை மாற்றுவழிக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.


தற்போது புதிய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஐநா பேரவை வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவுள்ள விசாரணை அறிக்கையை  தாமதித்துள்ளது.

அதனை முன்னிட்டு புதிய அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்து சமூகத்துடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.இதன்மூலம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தலாம் என நம்புகின்றோம்.

பிரச்சினையை உள்நாட்டில் தீர்த்துக்கொள்ள முனைகின்றோம். நாங்கள் தமிழ் சமூகத்துடன் உறவைப் பலப்படுத்த முனைகிறோம். ஆனால் தமிழர்களது முக்கிய கட்சியான ததேகூ எம்முதுடன் ஒத்துழைப்பதால் நாம் பிரச்சினையை இலகுவாக தீர்த்துக் கொள்ளலாம் என நம்புகிறோம்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில் இது தொடர்பாக சட்டமாஅதிபரிடம் அறிவித்துள்ளோம் விரைவில் அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் அல்லது விடுவிக்கப்படுவார்கள்.

திருகோணமலை மாணவர்கள் படுகொலை சம்பந்தமான மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்

பாலேந்திரன் ஜெயகுமாரி தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காணாமல் போனோர் தொடர்பாக ஆணைக்குழுவின் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக