வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

ஜனாதிபதி இம்மாதம் 15ம் திகதி இந்தியா பயணம் மார்ச் 15ல் மோடி இலங்கை விஜயம்...!!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்றே அவர் இந்தியா செல்கிறார்.

15ம் திகதி இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி 18ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார்.


அத்துடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார்.

இதேவேளை, பெளத்தர்களின் புனித தலமான புத்தகயாவுக்குச் செல்லவுள்ள அவர், அங்கிருந்து திருப்பதி ஆலயத்துக்கும் சென்று தரிசனங்களில் ஈடுபடுவார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்பு இந்தியாவுக்கு செல்லும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 15ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்றே அவர் இங்கு வருகை தருகிறார். 15ம் திகதி இலங்கை வரும் பிரதமர் நரேந்திர மோடி 20ம் திகதி வரை தங்கியிருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக