வியாழன், 13 நவம்பர், 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கையும் அரசியல் கட்சிகளின் பதிலும்…!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய சுரேஷ் பிரேமசந்திரன், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தங்களின் கோரிக்கைகளுக்கு வழங்கப்படும் பதில்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்று கூறி இருந்தார்.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு, அரசாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை வினவியது.

இதற்கு பதில் வழங்கிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகள் குறித்து தமக்கோ, தமது கட்சிக்கோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயம்
குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகள் தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியும் இதே கருத்தையே வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, இந்த விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக தமது கட்சியிடம் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

ஆனால் இதுவரையில் இவ்வாறான கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை.

இந்த நிலையில் தங்களின் கோரிக்கைகளை உத்தியோகபூர்வாக முன்வைத்து தங்களுடன் பேச்சுவார்த்த நடத்தினால், அதற்கான உரிய பதில்கள் வழங்கப்படும் என்று அவர் கூறியள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக