புதன், 1 அக்டோபர், 2014

கொழும்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தத் தீர்மானம்...!!


ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளது.

அமைச்சர் டிலான் பெரேராவின் குண்டர்கள், ஊடகவியலாளர் நந்தன குருப்பு ஆராச்சி மீது தாக்குதல் நடத்தி படுகாயம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் நடத்த ஊடவியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு ஏற்பாடு செய்யும் இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட உள்ளது.

ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழுவினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

இங்கு உரையாற்றிய குழுவின் ஏற்பாட்டாளரான லக்பிம பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சமன் வகாராச்சி,

ஊடகவியலாளர் நந்தன மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை நேரில் பார்த்த முச்சக்கர வண்டியின் சாரதிக்கு கொரியாவில் வேலை வாய்ப்பை வழங்கி அவரை அமைதிப்படுத்த முயற்சிக்கப்பட்டுளளது.

அத்துடன் பல சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் அசமந்தமாக நடந்து கொண்டுள்ளனர்.

பதுளையில் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரிடம் கொட்டவ பிரதேசத்தில் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே பொலிஸார் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

இதனை தவிர தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் கொழும்பில் இருந்து சட்டத்தரணியை அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக