தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தால், இலங்கைக்கு பதிலடி கொடுக்க இந்திய மத்திய அரசு தயங்காது என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எதையும் பேச்சு மூலமும், நல்லுறவு மூலமும் தீர்க்க வேண்டும் என்று கருதிதான் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அழைக்கப்பட்டு அவருடன் பேச்சு நடத்தப்பட்டது.
அதற்குள் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை நீடித்தால் இலங்கைக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது. இவ்வாறு எச்.ராஜா கூறினார் எனத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராமதாஸ் கண்டனம் இதேவேளை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒன்றரை மாதங்களாக வருமானமின்றித் தவித்த மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடலுக்குச் சென்ற நிலையில், அவர்களைக் கைது செய்திருப்பது மனித நேயமற்ற செயலாகும். அதுவும் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். இத்தகைய செயலை இனியும் அனுமதிக்கக்கூடாது.
இலங்கை அரசின் இடையூறுகளாலும், அத்துமீறல்களாலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு தான் தங்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறார்கள். இலங்கை அரசின் இந்தப் போக்கு தொடர அனுமதிக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. எனவே, கைது செய்யப்பட்ட 33 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.- என்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக