புதன், 18 ஜூன், 2014

இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும்: முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்!!


இலங்கைத் தீவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, சிங்கள இனவாதக் குழுக்கள், தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வன்முறையில் ஈடுபட்ட பொதுபல சேனா அமைப்புக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ. இதுகுறித்து அவர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பௌத்த மதத்தின் பெயரில் செயல்படும் பொதுபலசேனா குழு, இலங்கைத்
தீவில், பௌத்த மதத்தைத் தவிர வேறு மதங்களுக்கு இடம் இல்லை என்ற முழக்கத்தோடு,செயற்படுகிறது. வடக்கு, கிழக்கில் இந்துக் கோவில்களைத் தாக்கித் தகர்த்ததோடு, இந்துக் கோவில் வளாகங்களில் பௌத்த விகாரைகளைச் சிங்கள இராணுவத்தின் பாதுகாப்போடு, புத்த மதகுருமார்கள் கட்டி வருகின்றனர். கிறித்துவத் தேவாலயங்களில் ஆராதனையோ, ஜெப வழிபாடோ நடத்த விடாமல் தாக்குதல் நடத்துகின்றனர்.

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையான வாழுகின்ற இடங்களில் தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கும் பாங்கு ஒலி எழுப்பும்போதெல்லாம், அந்த அழைப்பு ஒலி எவர் காதிலும் விழாதவண்ணம், போது பால சேனா அமைப்பினர் ஒலிபெருக்கிகளில் பலத்த இரைச்சலோடு புத்த மதம் குறித்த ஆரவார முழக்கங்களை எழுப்புவதை வழக்கமாக்கினர்.

மசூதிகளையும் தாக்கினர். இந்தக் கொடுமைகளை, மஹிந்த அரசு தடுக்கவில்லை. இதன் விளைவாகத்தான், இப்போது கொழும்பு அருகில் இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வாழும் அளுத்தம, பேருவளை நகரங்களில் முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாத பௌத்த வெறிக்குழு கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளது. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் உடைமைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு உள்ளன.

மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் படுகாயமுற்று உள்ளனர். இலங்கைத் தீவில், மனித உரிமைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. சிங்கள மொழி, பௌத்த மதம் தவிர்த்து வேறு எந்த மதத்தின் அடையாளமும், குறிப்பாகத் தமிழ் இனத்தின் அடையாளம் அடியோடு இல்லாமல் ஆக்கப்பட, மஹிந்த அரசின் பின்னணியில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகள் குறித்து எந்த விசாரணையும் நடத்த ஐ.நா. மன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பையும் அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாகவே இலங்கை அமைச்சர்கள் கொக்கரிக்கின்றனர். எனவே, இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதற்குப் பின்னராவது உலக நாடுகள், சிங்கள அரசின் கோர முகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.- என்றுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக