ஞாயிறு, 1 ஜூன், 2014

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாளை முல்லைத்தீவு பயணம்!!


சென்ற மாகாணசபை கூட்டத்தொடர்களில் முன்வைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் பொருட்டு அவ்விடங்களை பார்வையிடவும், அம்மக்களுடன் குறைகேள் சந்திப்புகளை நடாத்தவும் முல்லைத்தீவுக்கு வடமாகாணசபையின் முதலமைச்சர் நாளை பயணம் செய்கிறார்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்
போன்ற பகுதிகளில் காணப்படும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் முன்னமே வடமாகாண சபையில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் பிரேரணைகள் சில முன்வைக்கப்பட்ட நிலையில் மேற்படி பயணம் நாளை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

கடந்த மாகாணசபையின் கூட்டத்தொடரின் 9வது அமர்வில் (22-05-2014) ஒட்டுசுட்டான் தட்டயமலை வாவெட்டி மலை கருங்கல் அகழ்வு விடயமாக ரவிகரனால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து அங்கு நடைபெறும் பிரச்சினைகளை நேரில் பார்வையிடவேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தப்பட்ட நிலையில், ஒட்டுசுட்டான், கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் காணப்படும் மக்கள் குறைகளை பார்வையிடவும் மக்கள் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அவர்களுடன் உரையாடவும் நாளைய பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என அறியவருகிறது.

மேற்படி இடங்களை பார்வையிட்ட பின்னர் பிற்பகல் புதுக்குடியிருப்பு பிரதேச சபை திறப்பு விழாவிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 4வது அமர்வில் (09.01.2014) கொக்குத்தொடுவாய் மக்களுடைய வாழ்வாதாரத்துக்குரிய நிலத்தில் அம்மக்கள் விவசாயம் செய்வதற்குரிய வழியை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்ற பிரேரணையும்,

6வது அமர்வில் (18.02.2014) கொக்கிளாய் முகத்துவாரத்துக்கு அருகில் தமிழர்களின் சொந்தக்காணிகளில் சிங்களவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதற்கென மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையும்,

நன்னீர் மீன்பிடி சட்டத்திற்கு முரணான வகையில் கொக்கிளாய் கடனீரேரியில் தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்கள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பிரேரணை மற்றும்

7வது அமர்வில் (18-03-2014) கரவலைப்பாடுகளில் உழவு இயந்திரத்தின் மூலம் கரவலை இழுப்பது விடயமாக கொண்டுவரப்பட்ட பிரேரணையும் ரவிகரனால் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்த மாகாணசபை அமர்வில், 2014.01.09 (4வது அமர்வு)  கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற எழுத்து மூல வினாவை ரவிகரன் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுகளை பிரதி அவைத்தலைவர் திரு.ம.அன்ரனி ஜெகநாதன் தலைமையில் உறுப்பினர்கள் திரு.து.ரவிகரன்,திரு.சி.சிவமோகன், திரு.வீ.கனகசுந்தரசுவாமி, திருமதி மேரி கமலா குணசீலன் ஆகியோர் ஒழுங்குபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக