இலங்கை யுத்தத்தின் இறுதி ஏழு ஆண்டுகளில் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவிருக்கும் ஐ.நாவின் விசாரணைக் குழுவில் குறைந்ததது 13 அங்கத்தவர்கள் இடம்பெற்றிருப்பர். சர்வதேச ரீதியில் பிரபல்யமான ஒரு முக்கியஸ்தர் உட்பட இரு நிபுணர்களினால் இந்த விசாரணை மேற்பார்வை செய்யப்படுவதாக இருக்கும்.
கொழும்பிலிருந்து வெளியாகும் 'டெய்லி பினான்சியல்' இதழ் ஒன்று இந்தச்
செய்தியை வெளியிட்டிருக்கின்றது. சட்ட மருத்துவ நிபுணர்களையும் உள்ளடக்கிய இந்த விசாரணைக் குழுவின் ஒரு தொகுதிப் பிரிவினர் அடுத்த எட்டு மாதங்களுக்கு இலங்கை, ஆசிய - பசுபிக், வட அமெரிக்க, ஐரோப்பிய பிரதேசங்களுக்குச் சென்று சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்களைச் சேகரிப்பதோடு, தம்முடைய அவதானிப்புக்களையும் பூர்த்தி செய்வதற்காக பிற தகவல்களையும் திரட்டுவர். 'டிஜிட்டல்' (படங்கள் மற்றும் வீடியோக்கள்) சான்றாதாரங்களையும் அவர்கள் ஆராய்வர்.
அமெரிக்கா மற்றும் 42 இணை அனுசரணையாளர்களால் முன்மொழியப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய ஐ.நா. விசாரணைக் குழு எதிர்வரும் வாரங்களில் தனது பணியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை விசாரணை விவகாரம் தொடர்பான செலவுகள், ஆளணி ஆகியவை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக விசாரணை, ஆய்வு, அறிக்கை தயாரிப்பு போன்றவற்றுக்கு சர்வதேசத் தர நிபுணத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை மேற்படி இரு நிபுணர்களும் அடுத்த பத்து மாதங்களுக்கு ஒழுங்கமைவு ரீதியில் வழங்குவார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அலுவலர்கள் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க மேற்படி இரு நிபுணர்களும் அது தொடர்பான இறுதி அறிக்கையில் ஒப்பமிடுவர். அவர்களுள் ஒருவர் சர்வதேச ரீதியில் மிக மூத்த - பிரபல்யமான பிரமுகராவார். அந்தப் பிரமுகர் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் கோபி அனான் அல்லது ஆஸ்திரேலிய ஜூரியான மைக்கல் கிர்பி ஆக இருக்கலாம் என ஊகம் கூறப்படுகின்றது. இவர்களுள் மைக்கல் கிர்பி, வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக்குத் தலைமை வகித்தவர்.
எது, எப்படியென்றாலும் இக்குழுவுக்குத் தலைமை வகிப்பவர் தனது அவதானிப்பையும் பரிந்துரையையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கே வழங்க வேண்டும். இவ்விடயத்தில் அவரின் கீழ் பணியாற்றுபவராகவே செயற்பட வேண்டும். ஐ.நா. செயலாளர் நாயகம் பணியில் பணியாற்றிய கோபி அனான் அதற்குக் கீழான பதவியான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பணியாள் தொகுதியில் ஒருவராகக் கடமையாற்ற முன்வருவது துர்லாபமே என்று கூறப்படுகின்றது. இந்த விசாரணைக் குழுவின் ஆளணி, செலவுத்திட்டம் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
ஆனால் ஆணையாளரின் உத்தேசத் திட்டப்படி மூன்று மனித உரிமை விசாரணையாளர்கள், ஒரு சட்ட ஆலோசகர், ஒரு சிரேஷ்ட இணைப்பாளர், ஒரு நிர்வாகி, ஒரு சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஆகியோர் ஆளிணியில் இடம்பெறுவர். மனித உரிமை விசாரணையாளர்களுள் ஒருவர் பாலின விடயங்களில் தேர்ச்சி பெற்ற விசாரணையாளராக இருப்பார்.
விசாரணைக் குழு இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டால் அக்குழுவுடன் ஒரேயொரு பாதுகாப்பு அதிகாரியும் வருகை தருவார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதி தொடங்குகின்றது. அதற்கு முன்னர் விசாரணைக் குழு பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக