செவ்வாய், 20 மே, 2014

மட்டு., அம்பாறையில் மாத இறுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் கூட்டங்கள்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கி அதனைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்குமான கூட்டங்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இக்கூட்டங்கள் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறையிலும், 31 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த முக்கிய கூட்டங்களில் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசக் கடமைகள் என்ன, இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் இத் தீர்மானங்கள் தொடர்பில் எப்படி வேலை செய்வது, இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி அதனைப் பூரணமாக நிறைவேற்ற முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் யாவை என்பன தொடர்பில் இக்கூட்டங்களில் ஆராயப்படவுள்ளது.

இவை தொடர்பில் மக்களின் கருத்துக்களும் இக்கூட்டங்கள் மூலம் பெறப்படவுள்ளன. மேலும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், வலுவிழந்தவர்கள், பாதிக்கப்பட்ட பெண்கள், அநாதைச் சிறுவர்கள் தொடர்பான பதிவுகளை, கிராமிய மட்டத்தில் ஆதாரங்கள், விவரங்களுடன் திரட்டவும், இராணுவத்தால் பாதிப்பட்டு இன்னும் மீளக்குடியேற்றப்படாத மக்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டவும் கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது எனவும் கூறப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக