சனி, 17 மே, 2014

வடக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கும்ஆலயத் திருவிழாக்களுக்கும் தடை.....!!!!

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யாழ். குடாநாட்டிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களை நடத்துவதற்குப் படையினர் தடை விதித்திருப்பதுடன், பொது  இடங்களில் ஒன்று கூடுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

நாளைய தினம் 18 ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் பல இடங்களில், முள்ளிவாய்க்கால் போரில்  உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்டவை மேற்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை நடத்த படையினர் தடைவிதித்துள்ளனர்.

நேற்றைய தினம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்திற்குச் சென்ற படையினர், உற்சவத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறியதுடன், இன்றும், நாளையும் (17ஆம், 18ஆம் திகதிகள்) பூஜை வழிபாடுகள் எவையும் நடைபெறக் கூடாது என கூறியிருக்கின்றனர்.

நேற்றைய தினம் மஹோற்சவத்தின் 3 ஆம் நாள் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே படையினர் அங்கே சென்று திருவிழா நடைபெறக் கூடாதெனக் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில், மக்கள் இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர், மக்களிடம் விடயத்தை நேரடியாகக் கேட்டறிந்து கொண்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த போது, இவை தொடர்பாக அப்பகுதி மக்கள் தனக்கு தெரியப்படுத்தியதாகவும், இதனையடுத்து அங்கே சென்றபோது, படையினர் அச்சுறுத்தியமையினால் மக்கள்  பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் கூறினார்கள். இது தொடர்பாக யாழ்.பிரதிப்பொலிஸ் மா அதிபருடன் தொடர்புகொண்டு கேட்டபோது,

இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் இதுபற்றி ஆராய்ந்து கூறுவதாகவும் கூறினார். எனினும் இவ்வாறான சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்றிருக்கின்றன. அங்கிருந்தெல்லாம் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. எனவே, இவ்வாறான சம்பவங்கள் மிக மோசமான அறிவிலித்தனத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம். இதுமாதிரி நிலையில்  வெசாக் தினத்தையும் கதிர்காம உற்சவத்தையும் மாற்றியமைக்க முடியுமா? அதேபோன்றே ஒவ்வொரு மத ஆலயங்களும் பூஜை வழிபாடுகளை சம்பிரதாயங்களின் பிரகாரமே செய்கின்றன. அதனை யாழ். படைத்தளபதி புரிந்துகொள்ளவேண்டும். இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட்டு உடனடியாக இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும்.  இதற்கான வேண்டுகோளை நாங்கள் விடுத்திருக்கின்றோம். மக்களை அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாதெனவும் அவர் கூறியிருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக