வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் பொதுக்குழு உறுப்பினருமாகிய திரு.சக்தி அவர்களிடம் அதிரடி நிருபர் பேட்டி

ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் பொதுக்குழு உறுப்பினருமான திரு.சக்தி அவர்களை திருமலையிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த அதிரடி நிருபர் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் ஈரோஸ் அமைப்பின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேட்டி கண்டு அது தொடர்பிலான விபரங்களை அனுப்பி வைத்துள்ளார் அதன் விபரங்கள் இங்கு தரப்படுகின்றன..
ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும், பொதுக்குழு உறுப்பினர்களுள் ஒருவருமாகிய திரு சக்தி அவர்களை சந்திப்பதற்காக திருகோணமலையிலுள்ள அவரது வாசஸ்தலத்திற்கு நாம் சென்றபோது அவரது நண்பர் ஒருவர் ஊடாக நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். திரு சக்தி அவர்களை சந்தித்த நாம் பின்னர் அங்கு அவரது மனைவி குழந்தைகளையும் காணக்கூடியதாக இருந்தது. இதன்போது சக்தி அவர்கள் தனது மகனுக்கு லோரன்ஸ் கபிலா என்னும் கொங்கோ நாட்டு அதிபரின் நாமத்தைச் சூட்டப்பட்டிருந்ததையும் அறியக்கூடியதாக இருந்தது. அதேபோன்று அவரது மூன்றாவது மகளுக்கு தமிழ் என இவர் பெயர் சூட்டியிருந்தமையையும் அறிந்து கொண்டோம். தமிழ் என்ற பெயருடைய இவரது மூன்றாவது மகள் இவரை மக்கள் என அழைத்ததையும் நாம் கேட்கக்கூடியதாக இருந்தது. இதுகுறித்து அவரிடம் ஏன் தங்களை மக்கள் என்றழைக்கிறார்? என்று கேட்டதற்கு, நாம் அடிக்கடி மக்கள், மக்கள் என்று கதைப்பதால் எனது மகள் என்னை மக்கள் என்று கூப்பிடுவது வழமையென்று தெரிவித்தார்.

இதன்பின்னர் அவரை தனிமையான ஒரு இடத்தில் இருந்து பேட்டி காணவேண்டுமென விரும்பி அவரிடம் நாம் எமது விருப்பத்தைத் தெரிவித்தோம். இந்த நிலையில் அவரது நண்பர் உள்ளிட்ட அவருடன் மேலும் இருவர் காணப்பட்டார்கள். அவர்கள் எம்மை எதுவித பரிசோதனையும் செய்யாத நிலையிலும் அவர்கள் மிகவும் அவதானமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் நாம் அவரது வாசஸ்தலத்தில் இருந்தபோது வாசஸ்தலத்தின் முகப்பில் ஒரு பெறுமதி மிக்க வாசகம் காணப்பட்டது. அந்த வாசகத்தையும் நாம் இங்கு இணைத்துக் கொண்டுள்ளோம்.
1948.நவம்பர் 15ல்..
நாடற்றவர்களாயினும்
மீண்டும் மீண்டும்
மலைகளில் உரமானேம்
தேநீரில் இரத்தமானேம்
ஆனாலும் இந்த மண்ணில்
அந்நியராக்கி விட்டார்
ஆதலால் எமது மண்ணை
உடைமையாய் மாற்றுவோம்
வாருங்கள் ஒன்றாய் போராடுவோம்..


எமது விருப்பத்திற்கு இணங்க நாம் தனிமையில் வேறொரு இடத்தில் அவரைப் பேட்டி காணுவதற்கு தயாரானோம். அவரும் அதற்குத் தயாரானார். அவரிடம் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தோம்..

அதிரடி நிருபரின் கேள்வி.. நீங்கள் ஈரோஸ் அமைப்பில் தற்சமயம் என்ன பொறுப்பில் இருக்கின்றீர்கள்? உங்களது நிலை என்ன?
ஈரோஸ் சக்தி.. தற்பொழுது 7பேரைக் கொண்ட செயற்குழுவிற்கு நான் பொறுப்பாக இருக்கின்றேன். மிக விரைவில் பொதுக்குழு கூட்டத்தினூடாக சில நிர்வாக மாற்றங்கள் வரும் என்று நினைக்கின்றேன்.

அதிரடி நிருபரின் கேள்வி..
நேற்றையதினம் தாங்கள் அதிரடி இணையத்திற்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளீர்கள், அந்த அறிக்கையை வெளியிடுவதற்கான காரணம் என்ன?

ஈரோஸ் சக்தி.. இந்த அறிக்கை வெளியிடுவதற்கான காரணம் கடந்த 2005ம் ஆண்டு தோழர் சங்கர்ராஜ் மறைவுக்கு பின் இலங்கையில் இருந்த தோழர்களும் வெளிநாடுகளில் இருந்த தோழர்களும் ஒரு கட்டமைப்பை உருவாக்க சில முயற்சி எடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக சுவிஸ் நாட்டில் தோழர் திலக் தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு கனடா, லண்டன் போன்ற நாட்டிலிருந்து கலந்து கொண்டனர். ஆனால் அக்;கூட்டத்தின் பின் சுவிஸ்பிரபா துஷி இவர்கள் ஈ.பி.டி.பி. உதவியுடன் ஈ.டி.எப் என்ற அமைப்பை சுவிஸ் பிரபா தனது பெயரில் சட்டரீதியாக மாற்றிக் கொண்டார். இதனால் அனைத்து தோழர்கள் மத்தியில் இவருடைய செயற்பாடுகள் சம்பந்தமாக முரண்பாடுகள் ஏற்பட்டது. ஆனால் சுவிஸ் பிரபா தான் மட்டும் தான் புலி எதிர்ப்பாளராகவும் மற்றவர்கள் அனைவரும் புலி ஆதரவாளராகவும் காட்ட முற்பட்டார். இதனால் நாங்கள் அனைவரும் வௌ;வேறு திசையில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் கடந்த தேர்தலில் இவரும் துஷியும் மக்கள் மத்தியில் நடந்து கொண்ட விதமும் மாற்று சகோதர அமைப்புகளுடனும் முரண்பாடு காரணமாக எங்கள் மக்கள் மத்தியில் ஈரோஸ் சம்பந்தமாக ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. அத்துடன் வருகிற பொதுத்தேர்தலில் இவர் மேலும் மக்களை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே நாங்கள் ஒரு முடிவிற்கு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இனி ஈ.டி.எப் ற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றும் ஈரோஸ் தனித்து செயற்பட வெண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளோம். இது சம்பந்தமாக சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறோம்.

அதிரடி நிருபரின் கேள்வி..
தற்போது ஈரோஸ் எனக் கூறிக்கொள்ளும் ராஜமனோகரன் பிரபாகரன் என்கிற சுவிஸ் பிரபா, முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் என்கிற வசந்தனின் தம்பியாரான துஷ்யந்தன் என்கிற துஷி மற்றும் அருட்பிரகாசம் என்கிற அருளர் இவர்கள் தொடர்பில் நீங்கள் கூறும் கருத்தென்ன?

ஈரோஸ் சக்தி..
சுவிஸ் பிரபா, துஷி, அருள்பிரகாசம் (அருளர்) இவர்கள் சம்பந்தமாக.. அருளர் இவர், இவருக்கு என்றும் ஒரு தனிப்பெருமை உண்டு. இவருடைய ஆளுமையில் தான் லங்காராணி குறிப்பு புத்தகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவருடைய பங்கு ஆரம்பக்காலங்களில் இயக்கங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தவர் அத்துடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் ஈரோஸின் வடக்கு கிழக்கு மாகாண அமைப்பின் அதன் நிர்வாக பிரிவிலும் அதன் பின்பு புலிகளுடனும் அதன் பின்பு ஈபிடிபியுடனும் இருந்து செயற்பட்டவர். பின்பு சிறிது காலம் தனது சொந்த வாழ்க்கையுடனும் இணைந்திருந்தார். ஆனால் தற்பொழுது இவர் ஒரு குழப்பமான மனிதராகவே காணப்படுகின்றார். மற்றும் இவர் தேர்தல் ஊடாக தான் ஒரு எம்.பி ஆக வந்தால் போதும் என்ற காரணத்தினால் தான் இவர் ஈ.டி.எப் பிரபாவுடன் மீண்டும் இணைந்து கொண்டார். இவர் ஓர் இலக்கில்லாத மனிதன்.
ஈ.டி.எப் சுவிஸ் பிரபா முன்பு ஒரு நல்ல நண்பராகத் தான் இருந்தார். ஆனால் இவரைப்பற்றி நான் கூறுவதை விட இவரைப் பற்றியதான செய்திகள் இணையத்தளத்தில் காணலாம். ஏன்? என்னைக்கூட அன்மையில் சிலரிடம் என்னைத் தூக்குவதாக கூறியுள்ளார். ஏன் மற்றும் சாதாரண பொதுமக்களையும் இதே பாணியில் மிரட்டுவதாக நான் அறிகிறேன்.
மற்றும் துஷி இவர் நோர்வே நாட்டில் வாழ்பவர். முதலாளிகளின் கைகூலி. இவர் சம்பந்தமாக எங்களைவிட வவுனியா வாழ் மக்களுக்குத் தெரியும்.

அதிரடி நிருபரின் கேள்வி..
மாற்றுத் தமிழ் அமைப்புக்கள் குறித்து உங்களுடைய கருத்தென்ன?

ஈரோஸ் சக்தி..
மாற்று தமிழ் அமைப்புக்களைப் பற்றி கூறுவதாக இருந்தால் பல வருடங்கள் சென்றாலும் சரியான பதில் தேட முடியாது. ஆனால் புலிகள் அமைப்பு இருந்த போது இவர்கள் அனைவரும் ஒரு மாற்று முன்னணியை ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள். மற்றும் இவர்களுடைய கருத்து ஒற்றுமையின் காரணமாகவும் இருக்கலாம். புலிகளுடைய அழிவுகளுக்கு பிறகும் கூட இதே நிலையில் தான் நான் பார்க்கிறேன். டக்ளஸ் யாழ் அரசியலும், வவுனியா புளொட் அரசியலும் ரிஎம்விபி (பிள்ளையான்) மட்டக்களப்பு அரசியலும், அம்பாறை கருணா அரசியலும் இதற்கிடையில் இருக்கும் சிறு கட்சிகளும் அரசின் பெயரால் எங்கே யாரை அதிகாரத்திற்குள் வைத்திருக்க முடியுமா? என்று கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் தீர்வு வருவதற்கு வரும் முன்பு இவர்களுடைய பிரச்சனையைத் தீர்த்தால்த் தான் ஒரு நல்ல கருத்து ஒற்றுமைக்கு வரமுடியும். அதனூடாக ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும். குறிப்பாக ரிஎம்விபி பற்றி கூறுவதாக இருந்தால் இவர்களும் இந்தியாவின் செல்லப்பிள்ளையாக மாறி வருவதாக நான் எண்ணுகிறேன். கருணாவைப் பற்றி கூறுவதாக இருந்தால் அவர் ஒரு அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாக நான் பார்க்கின்றேன்.

அதிரடி நிருபரின் கேள்வி.. தமிழ் மக்களுக்கு ஈரோஸ் அமைப்பின் சார்பாக என்ன தீர்வுத் திட்டத்தை நீங்கள் முன்வைக்கப் போகிறீர்கள்?

ஈரோஸ் சக்தி..
இன்றைய அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச நிலைமையும் குறிப்பாக ஆசிய பிராந்திய நிலைமைகளையும் கருத்தில் கொண்டு மீண்டும் 1985ல் ஐந்து இலக்கங்களும் முன்வைத்த திம்பு அரசியல் தீர்வு திட்டத்தினை நோக்கி செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. ஈரோஸ் இயக்கத்தை பொறுத்தவரையில் இது ஒன்றிணைக்கும் சக்தி. அனைத்து தமிழ் மக்களையும் பொது அமைப்புக்களையும் அரசியல் அமைப்புக்களையும் ஒரு அணிக்குள் கொண்டு வரக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிலமை கட்டாயம் என்பது நிதர்சனமான உண்மை.

அதிரடி நிருபரின் கேள்வி.. ஈ.டீ.எவ் என்கிற உங்களுடைய ஈரோஸின் அரசியல் பிரிவைச் சேர்ந்த பிரபா ஈரோஸின் தலைவர் தானே என தன்னைத்தானே கூறிக்கொள்கின்ற அதேவேளை மறைந்த தங்கள் தோழராகிய சங்கர்ராஜியின் மகனான நேசன் என்பவர் லண்டனிலிருந்து தாமே ஈரோஸின் தலைவர் என்று குறிப்பிடுகின்றார். இது குறித்து தங்களது கருத்தென்ன? தோழர் நேசன் குறித்து உங்களது அபிப்பிராயமென்ன?

ஈரோஸ் சக்தி.. தோழன் நேசன் சம்பந்தமாக கூறுவதாக இருந்தால் இவரைப்பற்றி நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு பிரச்சினை இருக்காது. இவரைப் பற்றியதான விமர்சனங்கள் இருக்கத் தான் செய்கிறது. காரணம் இவருடைய வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாத நபர்களுக்கும் பிரச்சனையாகத் தான் இருக்கும். இவர் ஒரு பிரிட்டிஸ் உளவு அமைப்புடனும் இலங்கை உளவு அமைப்புடனும் தொடர்பிருப்தாக கூறப்பட்டு வருகிறது. இதைப்பற்றியமான விமர்சனம் முன்வைப்பவர்கள் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் Raw, NIB, CIA, Mi5, Mi6, போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகள் இல்லாதவர்கள் யார்? புலிகளைப் பற்றித் தகவல்கள் கூறுவதாக நினைத்துக் கொண்டு இவர்கள் அனைவரும் இலங்கைத் தேசத்தைக் காட்டிக் கொடுத்துக் கொண்டும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டும் இலங்கையை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றும் பழையவர்கள் சென்று புதியவர்கள் தலைமைக்கு வருவது நல்லது தானே அதுவும் வெளிநாட்டிலிருந்து ஒரு தமிழ்மகன் குழப்பமான இலங்கைத் தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்குவது என்ன தவறு? இவருக்கு (நேசன்) நல்ல முறையி;ல் விடயத்தை சொல்லிக் கொடுத்து சரியான முறையில் வழிநடத்தினால் நல்ல தலைமைத் தாங்கக் கூடிய பொறுப்பு வரும் அத்துடன் இவருக்கு தலைமைக்குரிய பொறுப்புக்களும் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

அதிரடி நிருபரின் கேள்வி.. ஈரோஸ் அமைப்பின் அரசியல் வேலைத்திட்டம் என்ன?

ஈரோஸ் சக்தி.. எமது வேலைத்திட்டம் சம்பந்தமாக கூறுவதாக இருந்தால் கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும் இது போன்று நாம் சிறு சிறுதாக வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம் இது சம்பந்தமாக அரசுடனும் கலந்தாலோசித்த பிறகு கல்வி புணர்வாழ்வு புணர்ஸ்தாபனம் சம்பந்தமான உடன் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்களும் மனித உரிமை சம்பந்தமான திட்டமும் இத்துடன் இணைத்து வேலை செய்ய முற்படுகின்றோம்.

அதிரடி நிருபரின் கேள்வி.. இனப்பிரச்சினைக்கான உங்களது தீர்வுத் திட்டம் என்ன? அதற்காக ஈரோஸ் அமைப்பின் சார்பில் நீங்கள் முன்மொழியும் தீர்வு யோசனை என்ன?

ஈரோஸ் சக்தி.. தீர்வுத்திட்டம் சம்பந்தமாக இலங்கை இனப்பிரச்சினையில் இரு அரசுகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளை தமிழ்ப்பேசும் மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றார்கள் இப்போது தமிழ் பேசும் மக்களுக்கு வேண்டியதெல்லாம் தமது பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் நிர்ணயித்துக் கொள்ளக்கூடிய வழிமுறையையும், குடியேற்றங்கள் தொடர்பான பிரச்சனைகள் சிங்கள மேலாதிக்கத்திருந்து விடுபடக்கூடிய அதிகார வரம்பு ஒன்றையும் இவ் அனைத்தையும் செயலுக்கு கொண்டுவர தேவையான அரசியல் நடவடிக்கை முன்னெடுத்தல் இதற்காக போராட வேண்டிய சூழ்நிலைக்கு தமிழ் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை ஈடுகொடுக்கக் கூடிய அரசியல் விஸ்திரணத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஈழப்புரட்சி அமைப்பானது பின்வருவனவற்றை முன்மொழிகின்றது

1. தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கக் கூடியதாயும் நிலப்பரப்பால் தொடர்படையதாயும் அமைந்த வடக்கு கிழக்கு, மலையகப் பகுதிகளில் புதிய மாவட்ட வரையறுப்புக்களைச் செய்தல். இம் மாவட்டங்களின் இணைப்பிலிருந்து புதிய மாகாண எல்லை நிர்ணயிப்பைச் செய்தல்

2. புதிய மாகாண அமைப்பில் ஒரு அரசியல் அதிகாரசபை வடிவமைப்பைக் கொண்டு வருதல்.

3. மேற்படி அரசியல் அதிகார சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இப்பிரதேச இன விகிதாசார அடிப்படையில் அமைந்த புதிய படைப் பிரிவொன்றை அமைப்பதனூடாக தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்டுத்தல்.

4. வடக்கு கிழக்க மலையகப் பகுதிகளுக்கிடையிலான நேரடிப் பொருளாதார இணைப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அமுலாக்கல், சமதர்மப் பொருளாதாரத்தை நோக்கி இவற்றை நெறிப்படுத்துதல்.

5. தற்போது கடைப்பிடிக்கப்படும நாடுதழுவிய இன விகிதாசார அடிப்படையில் அமைந்த குடியேற்ற முறையை நிராகரித்து, மாவட்ட இன விகிதாசாரத்தை அடியொற்றிய குடியேற்றங்களைச் செய்தல். இவ் விகிதாசாரமானது 1948 ஆம் ஆண்டை நியமமாகக் கொண்டித்தல் வேண்டும்.

6. கல்வி, கலை, கலாச்சராம், தொழில்நுட்பம் முதலான அம்சங்களில் தமிழ் பேசும் மக்களின் தனித்துவம் சிதை வகையில் சுயாதீனமான செயற்பாடுகளைச் செய்தல்.

7. சர்வதேசக் கோட்பாடுகளில் ஏகாதிபத்தியத்திற்று எதிரான நிலைப்பாட்டைப் பின்பற்றுவதுடன் நட்பு நாடுகளிடமிருந்து நேரடி உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரத்தை உருவாக்குதல்

8. தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்த தீர்ப்பதற்கு ஏதுவாக இலங்கை இந்தியா அரசு பிரதிநிதிகளையும் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உயர்மட்ட குழு ஒன்று நிறுவுதல் வேண்டும்.

9. பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படல் வேண்டும், தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்டல் வேண்டும்.

இதுவே எமது நிலைப்பாடுகளாகும் இதை நோக்கியான ஒரு பொது வேலைத்திட்டத்தை சகல அமைப்புடனும் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.

அதிரடி நிருபரின் கேள்வி.. ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்து பின்னர் புலிகளிடம் சரணடைந்த வே.பாலகுமார் குறித்து என்ன கூறிக்கொள்ள விரும்புகிறீர்கள்?

ஈரோஸ் சக்தி.. பாலகுமார் சம்பந்தமாக.. இவர் ஒரு நல்ல மனிதர் ஆனால் தற்செயலாக தான் ஈரோஸ் அமைப்பில் இணைந்து கொண்டார் எனக்குத் தெரிந்தவரை புலி சம்பந்தமாக நல்ல பார்வை இருந்ததாக நான் நினைக்கவில்லை ஆனால் பிரபாகரன் சம்பந்தமாக நல்ல மதிப்பு அவருக்கு இருந்தது. மற்றும் ஈரோஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றபின் ஒரு முற்போக்கான வேலைத்திட்டத்தை அவரால் முன்னெடுக்கப்பட முடியாமல் போயிற்று. மற்றும் ஏனைய தலைமைப் பொறுப்பில் இருந்த தோழர் சங்கர்ரஜ், தோழர் நேசன் (பிரான்ஸில் வசித்து வரும் பெரிய நேசன்), புலிகளின் முன்னாள் நீதித்துறைப் பொறுப்பாளரான பரராஜசிங்கம் எனும் பரா, போன்றவர்கள் நழுவல் போக்கின் காரணமாக இவரைப் புலிசார்பு நிலைப்பாடு எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் அதனால் இவர் கொடுத்த விலைகள் என்ன? அதன் விளைவு இன்று இலங்கை அரசின் சிறையில் இருப்பதாக நான் நினைக்கின்றேன். காலம் தான் பதில் சொல்லும்.

அதிரடி நிருபரின் கேள்வி.. (மேற்படி கேள்விகளுக்கு சக்தி அவர்கள் பதில்களை அளித்த போது, நாம் சிரித்துக் கொண்டே..) உங்களுடைய ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த பாலகுமார், பரராஜசிங்கம் போன்றவர்கள் எல்லாம் இலங்கை இராணுவத்திடம் சரணாகதியடைந்து உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள் போலுள்ளதே என்று கூறியபோது,.

ஈரோஸ் சக்தி.. அப்படி இல்லை.. திருகோணமலையைச் சேர்ந்த தோழர் நரேஸ் 1990ல் ஈரோஸில் இருந்து புலிகளால் அவர்களது விடுதலைப் புலிகள் இமைப்பில் இணைக்கப்பட்டு 1995ம் ஆண்டில் காங்கேசன்துறை முகாம் தாக்குதலின் போது வீரமரணமடைந்து லெப்டினன்கேர்ணலாக மதிப்புக் கொடுக்கப்பட்டவர். இவர் உட்பட விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தோழர்களைத் தவிர ஏனைய அனைவரும் உயிர் தப்பித்துக் கொண்டார்கள்.

அதிரடி நிருபரின் கேள்வி.. இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியத் தலையீடு சம்பந்தமாக ஈரோஸின் நிலைப்பாடு என்ன?

ஈரோஸ் சக்தி.. இந்திய தலையீடுகள் சம்பந்தமாக: இலங்கையில் இரு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் வளர்ந்தமைக்கான காரணம் இந்தியாவை முழுப்பொறுப்பாகும். அண்மையில் இலங்கை அரசியல் சம்பந்தமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசினதும் அரசியல்வாதிகள் கருத்து கூறுவதைப்ப பார்த்தால் வடக்கு கிழக்குப் பகுதி இந்தியாவின் அங்கீகரிக்கப்படாத ஒரு மாநிலமாக கருதுவதற்கு இடமுண்டு. ஈ.என்.டீ.எல்.எவ், ரீ.எம்.வீ.பி அமைப்புக்களைப் பயன்படுத்தி சில நிர்வாக அமைப்புக்களை உருவாக்க முயற்சிப்பதை நாங்கள் காண்கின்றோம் அதேவேளை தமிழ் தேசிய இனத்தின் எண்ண அபிலாஷைகளை இந்தியா புறக்கணித்து நடக்குமாயின் வரலாற்றுத துரோகம் இளைத்ததாகNவு கொள்ளப்படும். இதனால் தமிழ்ப்பேசும் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை தமிழ் பிரதிநிதிகளிடம் விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்றும் இலங்கையைச் சூழ்ந்த சீனா, இந்தியா, அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சனையை பகடைக் காயாக பயன்படுத்துவதை நாம் காண்கின்றோம் அத்துடன் முக்கோண அரசியல் போக்கினையும் பார்க்கின்றோம் ஒரு புறமும் இந்தியா சார்ந்த குழுக்களும் மற்றும் மேற்கத்திய நாடுகள் சார்ந்த குழுக்களும் (புலிகள்) இலங்கை சார்ந்த குழுக்களும் இப்படியான போக்குக்கு இந்தியா முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

அதிரடி நிருபரின் கேள்வி.. இந்தியத் தலையீடு பற்றி கூறும்போது ரி.எம்.வி.பி மற்றும் ஈ.என்.டீ.எல்.எவ் ஆகியோரும் இந்தியாவின் நலன் சார்ந்து இருக்கிறார்கள் போல் தெரிகிறது. இந்நிலையில் ஈ.என்.டீ.எல்.எவ் குறித்து தங்களுடைய கருத்தென்ன?

ஈரோஸ் சக்தி.. ஈ.என்.டீ.எல்.எவ் இவர்கள் இந்தியாவின் உளவுஸ்தாபனமான ரோவின் கைகூலிகள் இவர்கள். மீண்டும் புதிய வடிவில் தமிழ்ப் பிரதேங்களுக்கு வருவதாக அறிகின்றோம் இலங்கை அரசு மிகவிரைவில் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்ல தீர்வினை முன்வைக்க தவறுவார்களாயின் ஈ.என்.டீ.எல்.எவ் இற்கு இது சாதகமாக அமையும். மீண்டும் இந்திய இலங்கை ஒப்பந்தக் காலங்கள் நினைவுகளுக்கு வரும்.

அதிரடி நிருபரின் கேள்வி.. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஈரோஸ் அமைப்பின் சார்பில் நீங்கள் என்ன கூறிக்கொள்ள விரும்புகிறீர்கள்?

ஈரோஸ் சக்தி.. புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி.. புலிகளை வளர்த்தவர்கள் அவர்கள் தான் புலிகளை அழித்தவர்களும் அவர்கள் தான் இவர்கள் கண்ணியத்துடனும் இதய சுத்தியுடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். இங்கு உள்ள மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இலாபமடைய முற்படுவதோடு ஒரு புதிய அரசியல் பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் இங்கு உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு வேண்டியதெல்லாம் நிம்மதியான ஒரு நல்ல வாழ்வு அதன் நோக்கியே உங்கள் உதவிகளும் அமைய வேண்டும்.

அதிரடி நிருபரின் கேள்வி.. அதிரடி இணையத்தின் செயற்பாடுகள் குறித்த தங்களுடைய கருத்தென்ன?

ஈரோஸ் சக்தி.. அதிரடி தளத்தைப்பற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு இது இன்னும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் உள்வாங்க வேண்டும் தமிழர்களுடைய வரலாறுகளையும் இயக்க வரலாறுகளையும் கொண்டு வரப்படல் வேண்டும் சமுக நலன் சம்பந்தமான பொது நிகழ்வுகளையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும் மக்கள் மத்தியில் ஆழஊடுறுவி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அம்பலப்படுத்தப்பட வேண்டும் உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேற்படி கேள்விகளுக்கு அவர் தெளிவான பதிலைக் கூறிய போதிலும் இலங்கையில் தேர்தல் தொடர்பிலான பேட்டிகளைக் காண்பதற்கு நாம் எண்ணியிருந்தோம். எனினும் திரு.சக்தி அவர்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களுடன் காணப்பட்டதால் அது குறித்து பேட்டி காணமுடியாத சூழ்நிலை காணப்பட்டது. தற்போதைய நிலைப்பாடுகள் தேர்தல்களுக்கு முகம்கொடுத்தல் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன தொடர்பில் அவரிடம் மிகவும் நீண்ட பேட்டியொன்றினைக் காணவிருக்கின்றோம். இவ்விடயங்கள் தொடர்பில் சக்தி அவர்களிடம் கேள்விகளைத் தொடுக்க விரும்பும் அதிரடி இணைய வாசகர்கள் தமது கேள்விகளை ஆரோக்கியமான முறையிலும், சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதி athirady@yahoo.com அனுப்பி வைக்குமாறும் அடுத்த பேட்டியின் போது அவற்றுக்கான பதிலுடன் பிரசுரிக்கப்படுமென்பதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நன்றி அதிரடி.கொம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக