சனி, 31 மே, 2014

கூட்டமைப்பின் மக்கள் விழிப்புணர்வுக் கூட்டங்கள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், "சமகால அரசியலும் ஜெனீவாத் தீர்மானமும்" எனும் தலைப்பிலான மக்களைத் தெளிவுபடுத்தும் கூட்டங்கள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று நடைபெற்றன. இதன்படி முதலாவது கூட்டம் இன்று காலை கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலும் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும்,
நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம், ஹென்ரி மகேந்திரன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாராஜா உரையாற்றுகையில், "தமிழ்த் தேசியக்துக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ள 400 இற்கு மேற்பட்ட தமிழர்களை இலங்கை அரசு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்துள்ளதுடன் 16 இயக்கங்களையும் தடை செய்துள்ளது. இது இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எடுத்துக் காட்டாகும். எனினும் இன்று கிடைத்துள்ள சர்வதேச சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

இதேவேளை நம்மைப் போல் இன்று பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கும் எங்களோடு ஒன்றுபட்டு இயங்கினால் விரைந்து நம் இலக்கை அடையமுடியும்" என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில், "இன்றைய அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச விசாரணைப் பொறிமுறை விரைவில் அமுலுக்கு வரும்.

உண்மை வெளிப்படவேண்டும் என்பதே விசாரணையின் இலக்காகும். இன்னும் ஓரிரு வாரங்களில் ஐ. நாவின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திபடி விசாரணைகள் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அது குறித்து மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தவும், அவர்கள் சாட்சியங்கள் அளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகளை எடுத்துக் கூறுவதுமே இந்தக் கூட்டத்தின் நோக்கம். இந்த விசாரணை, குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவதற்கப்பால் எமது தமிழின அரசியல் தீர்வுக்கான வழி வகையை உறுதி செய்யும். எனவே, தமிழினத்துக்கு நீதியான விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் போகாது என்பதற்காகக் கட்டுக் கோப்புடனும், நிதானமாகவும் நாம் செயற்பட வேண்டும்" - என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகையில், "நமது மண்ணை, நம் பூர்வீகத்தைக் காக்க தமிழ் மக்கள், கூட்டமைப்புடன் அணி திரளவேண்டும். இன்றைய அரசு விடுதலைப் புலிகளைக் கூறிக்கூறியே அரசியல் நடத்துகின்றது. துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்காவிட்டாலும், போர்ச்சூழலுக்குள்ளே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இன்னும் அடிமைகளாக எம்மை அரசு நடத்த முனையக் கூடாது" - என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக