செவ்வாய், 20 மே, 2014

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.....!!!!!

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை வைகோ நேற்று திங்கட்கிழமை நேரில் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:


மரண அடி கொடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சில மாநிலங்களில் ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு கூட்டணி வைக்க வேண்டிய தேவை காங்கிரஸூக்கு ஏற்பட்டுள்ளது.

வெற்றி பெற்றதற்கு பிறகு நன்றி அறிவிப்பு உரையில் "தேர்தலில் பெற்ற வெற்றி 125 கோடி மக்களின் வெற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வோம்' என மோடி கூறியது குறித்து, இது எந்தத் தலைவரும் கூறாத ஒன்று என அவரிடம் கூறினேன். "அந்த உரை தயாரிக்கப்பட்டதல்ல, இதயத்தில் இருந்து வந்தவை' என்று அவர் கூறினார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மே மாதத்தில் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த இராணுவ உதவியைக் கொண்டு இலங்கை இராணுவம், லட்சக்கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்தது.

காங்கிரஸ் தலைமை செய்த அதே தவறை மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் செய்யக் கூடாது என்று அவரிடம் வலியுறுத்தினேன்.

மேலும், ஈழத் தமிழர்கள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்புப் பெறுவார்கள்' என நம்புவதாகவும் கூறினேன்.

ஈழத் தமிழர் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயல்படுவேன்' என்று அவர் உறுதியளித்தார்.

சிறுபான்மை மக்களுக்கு நீங்கள் பாதுகாவலன் என உணரும் நிலை நாட்டில் ஏற்பட வேண்டும் என்று கூறியபோது, "அந்த நம்பிக்கையை நான் பிரதிபலிப்பேன். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் கார்கில் தொகுதியில்கூட பாஜக அடைந்துள்ள வெற்றி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு' என்று மோடி கூறினார்.

டில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அக் கூட்டத்தில் எங்கள் கட்சிப் பிரதிநிதியாக கணேசமூர்த்தி பங்கேற்பார் என்று அவரிடம் தெரிவித்தேன் என்றார் வைகோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக