கொண்டாட்டங்களை விடுத்து, இந்த மோதலினால் பாதிக்கப்பட்டோருக்காக ஒருநாள் நினைவு தினத்தை அனுஷ்டிக்குமாறு இலங்கை அரசை கனடா தூண்ட விழைகிறது." என்றும் அவர் கூறுகின்றார். "யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்காக ஒரே தினத்தை நினைவு நாளாக அனுஷ்டிப்பது இங்கு சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் என இலங்கையின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரையில் கூறியிருக்கின்றது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் போர்க்கால எடுப்புகளில் இருந்து இலங்கை நீங்குவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டிருப்பவை வருமாறு: கடந்த வருடங்கள் போல இந்த வருடமும் மாத்தறையில் மே 18 ஆம் திகதி நடைபெறும் வெற்றி அணிவகுப்பு நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்புகள் இலங்கையில் உள்ள தூதரகத் தலைவர்களுக்கு அண்மையில் கிடைத்தது. கனேடியத் தூதுவர் என்ற முறையில் இலங்கை மக்களுடன் அவர்களின் வெற்றியிலும் சேர்ந்து கொண்டாடுவது எனது பணியில் அடங்குகின்றது. எனினும் 18 ஆம் திகதி நடைபெறும் இந்த வெற்றி அணி வகுப்பில் நான் பங்குபற்ற மாட்டேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதுள்ள ஈடுபாட்டால் நான் இத்தகைய முடிவை எடுத்துள்ளேன் என சில விமர்சகர்கள் தவறான தீர்மானத்துக்கு வந்துவிடலாம். அது தப்பானது. நான் தெளிவாகக் கூறுகின்றேன். இந்த இலங்கைத் தீவுக்கும் மக்களுக்கும் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்திய கசை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். இலங்கைக்கு வர முன்னர் நான் ஆப்கானில் பணி புரிந்தேன். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் நடத்திய அழிவுகளை அங்கு நேரடியாகவே கண்டேன். புலிகள் இயக்கத்தின் மரபும் அதுதான்.
விடுதலைப் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இரக்கமற்றவர்கள், ஒற்றைச் சிந்தனைப் போக்கு உடையவர்கள், தாங்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் மக்களின் உண்மையான அபிலாஷைகளை அவர்கள் பிரதிபலித்து நிற்கவில்லை. 2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை உலகுடன் சேர்ந்து கனடாவும் வரவேற்றது. மேலும் 2006 முதல் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு நிதி தாராளமாகக் கிடைப்பதைத் தடுப்பதற்காக 2008 இல் உலகத் தமிழர் இயக்கத்தை கனடா தடை செய்தது. இந்த இரண்டு இயக்கங்களும் இன்னும் கனடாவில் தடை செய்யப்பட்டவையே.
ஆனால், இப்போது யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த யுத்தகால பிரசங்கங்களை மூடி வைத்துவிட்டு, மீள் நல்லிணக்கத்தை நோக்கி துரிதகதியில் தீவிரமாக ஈடுபட வேண்டிய நேரம் இலங்கைக்கு வந்து விட்டது. சமூகங்களுக்கு இடையிலான உறவை சீர் செய்யும் நேரம் இது. இன, மத, மொழி அடையாளங்களுக்காக பாகுபடுத்தப்படாமல் அனைத்து இலங்கையரும் கௌரவத்துடன் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்தும் சமயம் இது. தகப்பனோ - மகளோ, மகனோ - தாயோ யுத்தத்தில் கொல்லப்பட்டால் அல்லது திரும்பி வராமல் போனால் அவர்கள் பாதிக்கப்பட்டோரே. சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ, பறங்கியரோ எந்தச் சமூகமுமே இதில் தப்பித்துக் கொள்ளவில்லை.
இந்தப் பின்புலத்தில்தான் - நாட்டுக்குள் வெற்றி வாகை சூடியோர், தோற்றுப் போனோர் என்ற பிரிவை உறுதிப்படுத்தும் வெற்றி அணிவகுப்பு நிகழ்வைக் கைவிட்டு, இந்தப் போரினால் பாதிக்கப்பட்டோரின் நினைவுக்காக ஒரு நாளை அறிவித்து அனுஷ்டிக்குமாறு கனடா இலங்கையைத் தூண்டுகின்றது. நான் மாத்தறையில் (அந்நிகழ்ச்சியில்) இருக்க மாட்டேன் ஆனால், முப்பது ஆண்டுகாலப் போரில் தமது நேசத்துக்குரியஉறவுகளை இழந்தோரை நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பேன். - இப்படி அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக