வியாழன், 22 மே, 2014

புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்தமைக்காக நாடு கடத்தப்பட்ட பிரிட்டிஷ் பெண் ஒரு கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு....!!!

தமது தோளில் புத்த பகவானின் படத்தைப் பச்சை குத்தியிருந்தார் என்ற குற்றத்துக்காக நாட்டுக்குள் நடமாட அனுமதிக்கப்படாமல், கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பிரிட்டிஷ் தாதிப் பெண்ணான நயோமி மிச்செல் கொல்மென் (வயது 37) சார்பில் அந்த நடவடிக்கையை ஆட்சேபித்து ஒரு கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தான் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர் என்றும், புத்த பகவான் மீது தமக்குள்ள பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் தாமரை மலரில் புத்தர் அமர்ந்திருப்பது போன்ற சித்திரத்தைத் தாம் தமது வலது கையின் தோள்பட்டையில் பச்சை

குத்தியிருக்கிறார் என்றும், இது போன்று புத்தரின் பக்தர்கள் பலர் தங்களின் தேகத்தில் புத்தரின் சித்திரங்களைப் பொறித்திருக்கின்றமை தமக்கு நன்கு தெரியும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து, கம்போடியா, இந்தியா ஆகிய நாடுகளில் தியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட புனிதர் எனத் தம்மை விவரித்துள்ள அவர், ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் இரு தடவைகள், இந்தச் சித்திரம் தோள்பட்டையில் இருக்கத்தக்கதாக - அவை தெரியும்படியாக வெளிப்படுத்தியபடியே - இலங்கைக்குத் தாம் வருகை தந்து, எந்தக் கட்டுப்பாடுகளோ, மட்டுப்படுத்தல்களோ இன்றி சுதந்திரமாக நடமாடி, சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பினார் எனவும் தமது மனுவில் அவர் விவரித்துள்ளார். செல்லுபடியான 14 நாள் விசாவுடன் இந்தத் தடவை இலங்கைக்கு வந்த சமயம், தாம் கைது செய்யப்பட்டு, கீழ்த்தரமான முறையில் நடத்தப்பட்டு, பிரிட்டிஷ் தூதரகத்துடன் கூடத் தொடர்பு கொள்ள முடியாத முறையில் தடுத்து வைக்கப்பட்டார் எனத் தமது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், அந்தக் கைதும், தடுத்து வைப்பும், நாடு கடத்தலும் சட்டவிரோதமானவை என உத்தரவிட்டு அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் உட்பட்டவைக்கு நஷ்டஈடாக ஒரு கோடி ரூபா பெற்றுத் தரும்படியும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

 குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் சார்ஜண்ட் உபசேனா, இன்ஸ்பெக்டர் சுரவீர, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக