திங்கள், 19 மே, 2014

வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்காத நாடுகளை மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார்......!!!!

இலங்கையில் கடந்த 2009  மே 18ல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளை அந்நாட்டு இராணுவம் வீழ்த்தியது. இந்த நாளை ஆண்டு தோறும் வெற்றி தினமாக அந்நாட்டு அரசு கொண்டாடி வருகிறது.

இதில் பங்கேற்குமாறு இலங்கையில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. எனினும், கனடா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் வெற்றி தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்தனர்.

இது குறித்து கனடா தூதர் ஷெள்ளி வைட்டிங் கூறுகையில்,


வெற்றி தின அணிவகுப்பை இராணுவம் தற்போது நடத்துவது பொருத்தமற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் தான் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்ச தனது சொந்த ஊரான மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

சில நாட்டு அரசுகள் குருடாகவும், செவிடாகவும் ஊமையாகவும் உள்ளன. நாம் இந்த வெற்றியைக் கொண்டாடுவதை அவை எதிர்க்கின்றன.


இந்த நாளை நாம் கொண்டாடக் கூடாது என்று சில தரப்பில் கூறப்பட்டாலும், இதைக் கொண்டாடுவதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்.

நாம் அமைதியின் வெற்றியைத்தான் கொண்டாடுகிறோமே தவிர, போரின் வெற்றியை அல்ல. போரில் வீரம் காட்டிய கதாநாயகர்களுக்கு மரியாதை செலுத்த சிறந்த வழி, அமைதியைப் பராமரிப்பதுதான்.

மிகப்பெரிய உயிர்த்தியாகங்களால் சாதிக்கப்பட்ட அமைதியைக் காக்க உறுதியேற்போம் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக