வெள்ளி, 2 மே, 2014

கிளிநொச்சியில் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்!!! (படங்கள் இணைப்பு)

மக்களினதும், கிளிநொச்சி மாவட்டத்தினதும் நலன் கருதி மாவட்டத்திற்கென வகுக்கப்படுகின்ற பொதுவான திட்டத்திற்கு அமைவாக எதிர்வரும் காலங்களில் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று (02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் கடந்த நான்காண்டுகளின் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவி திட்டங்கள், சேவைகள் கிடைக்கப் பெறாத பிரதேசங்கள் இன்றும் காணப்படுகின்றது எனவேதான் இனிவரும் காலங்களில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் மூலம் மாவட்டத்தின் தேவை பாகுப்பாய்வினை மேற்கொண்டு ஒட்டுமொத்த மாவட்டத்திற்குமான அபிவிருத்திக்கு என ஒரு திட்டத்தினை வகுத்து அதன் மூலம் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளை நகர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அப்போதுதான் இந்த மாவட்டத்தில் பாரபட்சமற்ற கிராமம் நகரம் என்ற வேறுபாடின்றி அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள முடியும்.
மீள்குடியேற்றத்திற்கு பின்னர் இந்த நான்கு ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இங்கு பணியாற்றி அரசசார்பற்ற உள்ளுர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதற்காக தொண்டு நிறுவனங்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றேன்.அந்த காலத்தில் மக்களுக்கு அதிக அவலம் நிறைந்த காலமாக இருந்தமையினால் எத்தனை தொண்டு நிறுவனங்கள் வந்தாலும் அரசும்,ஜனாதிபதி விசேட செயலணியும் அனுமதி வழங்கியது. காரணம் மக்களின் வாழ்விலும், பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கையினால் அதனடிப்படையில் மக்களின் வாழ்விலும், பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் துரிதகதியில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது மீள்குடியேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகளை மீளாய்வு செய்யவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஏனெனில் எங்களை பொறுத்தவரை இந்த மாவட்டத்தில் அபிவிருத்தியின் பயன்கள் எல்லா மக்களுக்கு பாரபட்சமற்ற முறையில் சென்றடைய வேண்டும் என்பதுவே. இதில்; கிராமங்களை முதன்மைபடுத்திய அபிவிருத்தியே முக்கியமானது இந்த மாவட்டத்தில் அதில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம். இதில் கல்வி, சுகாதாரம், உட்கட்டுமான பணிகளிலும் கிராமங்களில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப்பணிகள் நன்கு திட்டமிடப்பட்டு மக்களினதும், பிரதேசத்தினதும் தேவைகளின் அடிப்படையில் முதன்மைபடுத்தி மேற்கொள்ளப்படல் வேண்;டும். குறிப்பாக கிராமங்களின் உள்ளக வீதிகள் எல்லாம் மிகவும் மோசமாக இருக்கிறது. பெருமளவுக்கு முக்கியமான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் பெருமளவு உள்ளக வீதிகள் மோசமாகவே காணப்படுகின்றது.
எனவே அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளக வீதிகளின் நிரந்தரமான புனரமைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.அத்தோடு கல்வி செயற்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தற்போது மாணவர்கள் கற்றலில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர் ஆனால் அவர்களது குடும்ப பொருளாதாரம் அதற்கு ஒரு தடையாக உள்ளது. மேலும் மாற்று வலுவுள்ளோர்களுக்கான வாழ்க்கை முன்னேற்றத்திற்கான நிரந்தர உதவியினை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனக்கேட்டுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு அமைவாக தங்களின் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் இது மிகவும் முக்கியமானது தன்னிச்சையாக நேரடியாக பயனாளிகள் தெரிவு முதல் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது வரை மேற்கொள்ள முடியாது அதற்கான வழிமுறைகள் ஊடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும் பல பணிகள் பிரதேச செயலகங்களுக்கோ, மாவட்டச் செயலகங்களுக்கோ பிரதேச ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கோ தெரியாமல் மேற்கொள்ளப்படுகிறது இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் தவிர்க்கப்படல் வேண்டும். என்பதோடு திட்டகளின் நிகழ்வுகளில் அரச பிரதிநிதிகள் பங்குபற்றல் இருக்கவேண்டும் இது தொண்டு நிறுவனங்களின் சுயாதீனத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு அல்ல. மாறாக அரச கட்டமைப்பின் நடைமுறைக்கு ஊடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் என்பதற்காகவே. எனவே இனிவரும் காலங்களில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்கள் என்பன மாவட்டத்தி;றகான பொது தேவைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும் அதற்கு அனைவரும் தங்களின் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,மேலதிக அரச அதிபர் சீர்ணிவாசன், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், பளை பிரதேச செயலர் திருமதி ஜெயராணி, கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன், பூநகரி பிரதேச செயலர் சத்தியசீலன் மாவட்டச்செயலக உதவிதிட்டப்ணிபாளர் கௌரிதாசன், அரசசார்பற்ற உள்ளுர், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக