புதன், 21 மே, 2014

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துள்ள போலி மிருகவைத்திய நிலையங்கள்!!!

(பூர்வீகம் செய்திகளுக்காக நம் நிருபர்)

அண்மைக்காலமாக  வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள போலியான மிருகவைத்திய நிலையங்கள் மற்றும் போலி மிருகவைத்தியர்களால் பொது மக்கள் மற்றும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதுடன், தவறான வழிநடத்தலுக்கும் உள்ளாகின்றனர்.

பூந்தோட்டம், பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் போலி மிருகவைத்திய நிலையங்களில் தம்மை மிருக வைத்திய நிபுணர்கள் என அறிமுகப்படுத்தி மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அதிகளவான பணத்தையும் பொதுமக்களிடம் வசூலிக்கின்றனர்.

அண்மைக்காலமாக வவுனியாவில் அதிகரித்துள்ள விசர் நாய்க்கடி
சம்பந்தமாக பொது வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் இப் போலி மிருக வைத்தியர்களின் போலியான விசர் நாய் தடுப்பூசி சான்றிதழுடன் வைத்தியசாலைக்கு வருவதால், பொது வைத்தியசாலை மருத்துவர்களும் நாய்க்கடிக்கான சிகிச்சை வழங்குவற்கு பெரும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.

விலை குறைந்த காலாவதியான, விசர் நாய் தடுப்பூசிகளை இப் போலி வைத்தியர்கள் வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு போடுவதுடன் போலியான சான்றிதழையும் வழங்குகின்றனர்.

எதிர்கால பொதுச்சுகாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மேற்படி
செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சம்பந்தபட்ட நபர்கள் தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா மாவட்ட அரச கால்நடை வைத்திய அதிகாரிக்கோ அல்லது பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கோ உடனடியாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் தங்களது செல்லப்பிராணிக்கோ, கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்குமுன் சிகிச்சை அளிக்கும் நபர் அங்கீகரிக்கப்பட்ட மிருக வைத்தியரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக