வியாழன், 22 மே, 2014

இணையத்தளங்களை அரசு முடக்கியமையை ஆட்சேபித்து நேற்று முறைப்பாட்டு மனு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்......!!!!

சில இணையத்தளங்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் அரசினால் தடைசெய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்து, அந்த நடவடிக்கைகளை ஆட்சேபித்து நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டு மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இணையப் பத்திரிகையாளர் அமைப்பு இந்த முறைப்பாட்டு மனுவைக் கையளித்த சமயம், ஊடக உரிமைகள் தொடர்பான அமைப்புக்களினதும், எதிர்க்கட்சிகளினதும் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இலங்கையில் சில இணைய ஊடகங்கள் சட்ட முறையற்ற விதத்தில் தடை
செய்யப்பட்டு முடக்கப்பட்டிருக்கின்றமை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என்றார் ஐ.தே.கட்சியின் செயலாளரும் எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க. ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் கூட இவ்வாறு மறைமுகமான முறையில் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளன என்றார் அவர். அரசுக்கு எதிரான விடயங்களையும், சர்ச்சைகளையும் அம்பலப்படுத்தும் குறைந்தது எட்டு இணையத்தளங்கள் இவ்வாறு முடக்கப்பட்டிருக்கின்றன என தென்னிலங்கையில் தெரிவிக்கப்பட்டது. இதே சமயம், வெளிநாடுகளில் இருந்து இயங்கும் - ஈழத்தமிழர்களின் நலன்களையும் உரிமைகளையும் பிரதிபலிக்கும் - பல டசின் இணையத்தளங்களை நாட்டுக்குள் பார்க்க முடியாதவாறு அவற்றை தொழில்நுட்ப ரீதியில் அரசு முடக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக