புதன், 21 மே, 2014

யாழ்.பல்கலைக்கழகம் நாளை முதல் பகிஸ்கரிப்பு போராட்டம்.....!!!!!

யாழ்.பல்கலைக்கழகத்தினை தன்னிச்சையாக இழுத்து மூடிய நிர்வாகத்தின் செயற்பாட்டை கண்டித்தும் மாணவ தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களிற்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலை கண்டித்தும் நாளை முதல் பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னராக விசேட இடமொன்றில் இன்று நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் மாணவ பிரதிநிதிகள் அவ்வறிவிப்பை விடுத்தனர். நாளை முதல் அடுத்து வரும் இரண்டு தினங்களிற்கு இப்பகிஸ்கரிப்பு தொடருமென தெரிவித்த அவர்கள் விரிவுரைகள் எதிர்வரும் 26 ம் திகதி
திங்கட்கிழமையே நடைபெறுமெனவும் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு நாட்களும் எந்தவொரு மாணவனும் விரிவுரைகள் எதிலும் பங்கெடுக்கமாட்டார்களென தெரிவித்த மாணவ ஒன்றியப்பிரதிநிதிகள் மாணவர்களது சக்தியை வெளிப்படுத்த அனைத்து மாணவர்களும் ஒன்று திரண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். முள்ளிவாய்க்காலில் உயரிழந்த உறவுகளிற்கு நினைவேந்தல் நடத்தாது தடுக்கவே பல்கலைக்கழகத்தை இழுத்து மூடியதாக குற்றஞ்சாட்டிய மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் நினைவேந்தலை தடுத்தமை தொடர்பில் கடும் சீற்றத்தையும் வெளியிட்டனர். கடந்த 16 ம் திகதி இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகம் இன்றைய தினமே மீள திறக்கப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய பின்னர் மாணவர்கள் பகிஸ்கரிப்பு போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக