செவ்வாய், 6 மே, 2014

சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்கும் வகையில் செயற்படும் அரசு-ஜெஹான் பெரேரா!!!

சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தேசிய சமாதானப் பேரவையின் முன்னாள் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அண்மையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் தடை செய்திருந்த போதிலும், இதற்கான உரிய நியாயங்களை சர்வதேசத்திடம் அழுத்தமாக முன்வைக்கத்
தவறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் குறித்த அமைப்புக்களையும் தனிப்பட்ட நபர்களையும் தடை செய்யும் இலங்கையின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்து அரசாங்கம் தடை செய்திருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இதற்கான ஆதாரங்களை அரசாங்கம் சமர்ப்பிக்கத் தவறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பூரணமாக விசாரணைகளின் பின்னரே அவற்றை வெளியிட முடியும் எனவும் அரசாங்க பேச்சாளர் அண்மையில் குறிப்பிட்டிருந்ததாகவும், இது நம்பகத் தன்மையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவா சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றார்கள் என்பதனை சரியான வகையில் வெளிப்படுத்தாமை அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு குந்தகத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்து தடுத்து வைக்கப்படும் போது சர்வதேச தர நியமங்களை பேண வேண்டியது அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அல்லது சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் நம்பிக்கை மேலும் வலுவிழக்க அதுவே வழியமைத்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக