சனி, 17 மே, 2014

கனடா நாடாளுமன்றில் நினைவேந்தல் நிகழ்வு!!


இலங்கையில் யுத்தத்தின் இறுதியில் கொல்லப்பட்டும், காணாமலும் போகச் செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக 'காணாமல் போன குரல்களின் ஞாபகார்த்த' அஞ்சலி நிகழ்வு கனேடிய நாடாளுமன்றத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 'கொமன்வெல்த்' கூடத்தில் கனேடிய தமிழ்க் காங்கிரஸின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் கனடாவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பிரமுகர்களும் பொதுமக்களும் பங்குபற்றினர். காணாமல் போன உறவுகளின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர்களின்
ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து, கிறிஸ்தவ பிரார்த்தனையுடன் நினைவஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்வின் பின்புலத்தில் செயற்பட்ட ஸ்கபுரோ மத்திய தொகுதி எம்.பியான றொக்ஸன் ஜேம்ஸ் அம்மையார் முதலில் அஞ்சலி உரை நிகழ்த்தினார். கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் தோமஸ் முல்கயரின் செய்தியை புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் ஒட்டாவா மத்திய தொகுதி எம்.பி.யுமான போல் டிவர் வாசித்தார்.

லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடுவின் செய்தியை கிறிஸ்டி டன்கன் எம்.பி, மூத்த லிபரல் செனட்டர் டேவிட் ஸ்மித்துடன் எடுத்து வந்து வாசித்தார். புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.யான ஸ்டோனி கிறீக், மனித உரிமை விமர்சகர் வெயின் மார்ஸ்டன், லிபரல் கட்சி எம்.பி.யான கில்வூட் ஜோன் மக்கே, கன்சர்வேட்டிவ் கட்சி, செனட்டர் டொன் மெர்டித், புதிய ஜனநாயகக் கட்சி எம்.பியான ராதிகா சிற்சபேசன் உட்பட பலர் உரையாற்றினர். ஏற்பாட்டாளர் சார்பில் பற்றிக் பிறவுண் எம்.பி. நன்றியுரை நிகழ்த்தினார். பெரும் எண்ணிக்கையான எம்.பி.க்களும், செனட்டர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் பெருவலியின் நினைவை எடுத்துரைக்குமாற் போல கறுப்புப் பட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்டும் காணாமல் போகவும் செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்காக அவர்கள் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக