சனி, 17 மே, 2014

22 ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வாம்! ஒரு தலைப்பட்சமாக சிவாஜி அறிவிப்பு!!


எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபையின் அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்விலாவது முதலமைச்சர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கும், வீர மறவர்களுக்கும் அஞ்சலி செலுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று காலை
யாழ். ஊடக அமையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தளார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- நேற்று வடமாகாண சபை வளாகத்திற்கு முன்பாக ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் அஞ்சலிச் சுடர் தட்டிவிழுத்தப்பட்டு அராஜகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வினை ஒழுங்கு செய்த குழுவின் சார்ப்பில் நான் ஊடகப் பேச்சாளராக இருந்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். அதே போன்று வடமாகாண சபையில் உள்ள ஏனைய அனைவருக்கும் நான் தெலைபேசியூடாக இவ்வாறு ஓர் அஞ்சலி நிழ்வு உள்ளது என்பதை அறிவித்திருந்தேன். முதலமைச்சர், பேரவைத் தலைவர் ஆகியோருக்கும் அறிவிக்க முயற்சித்திருந்தேன். ஆனால் ஒருவரும் என்னுடைய தொலைபேசி அழைப்பினை இணைத்துக்கொள்ளவில்லை.

குறிப்பாக பேரவைத் தலைவருக்கு மேற்படி அஞ்சலி நிகழ்வு தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்த சந்தர்ப்பத்தில் இருந்தே தொலைபேசியூடாக தொடர்பினை ஏற்படுத்தியிருந்தேன். ஆனால் அவர் என் தொலைபேசி அழைப்பினை இணைத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் தொடர்ந்து இரவு மற்றும் 16ஆம் திகதி காலையும் தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. இறுதியாக வடமாகாண சபைக்கு புறப்படும்போது தொடர்பினை ஏற்படுத்தியிருந்தேன். அப்போது அவர் அழைப்பினை ஏற்றுக் கொண்டு என்னுடன் பேசியிருந்தார்.

இதன்போது அவர், தனக்கு மேற்படி அஞ்சலி நிகழ்வு தொடர்பாக எதுவும் அறிவிக்கவில்லை என்றும், ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டார் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் வீதிகளில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வுகளில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் சொல்லி அழைப்பினை துண்டித்திருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவு தினங்களை அடுத்து மே 17,18 ஆகிய திகதிகளில் இங்குள்ள இந்து ஆலயங்களின் பூஜை நிகழ்வுகளுக்காக ஒலிக்க விடப்படும் மணியினை ஒலிக்க விடுவதற்கு இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர்.

இராணுவம் விதித்துள்ள தடைகளையும் மீறி நாங்கள் ஆலய மணியினை ஒலிக்க விடவேண்டும். இவ்வாறு இராணுவம் ஆலய மணியினை ஒலிக்க விடாமல் தடுத்து நிறுத்துமாக இருந்தால், ஒரு திட்டமிட்ட நாளை தெரிவுசெய்து இந்த சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஒருமணி நேரம் தொடர்ந்து அனைத்து ஆலயங்கள், தேவாலயங்களில் மணி ஒலிக்கவிடப்படும். மீண்டும் போராட்டத்திற்கு எங்களை தள்ளவேண்டாம் என்று இந்த அரசாங்கத்தைப் பார்த்து நாங்கள் கேட்க விருப்புகின்றோம். இராணுவத்தினை தமது வேலையினைப் பார்த்துக் கொண்டு அடங்கி இருக்கச் சொல்லுங்கள். - என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக