சனி, 17 மே, 2014

மனங்களால் ஒன்றுபட்டு உறவுகளுக்காய் அஞ்சலிப்போம்; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

கல்விதான் எமது ஒரே இலக்கு. அரசியல் செயற்பாடுகள் எமக்கு அப்பாற்பட்ட விடயங்கள். நாம் எங்கள் மக்களின் உரிமைகளையே வலியுறுத்துகின்றோம். முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர். ஐந்து ஆண்டுகள் கடந்தும் அந்த இரத்தக்கறை அகலவில்லை. இந்தத் துயரமான சூழலில் மாண்டுபோன மக்களுக்கு அஞ்சலி செலுத்த எமக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அனைவரும் மனதால் ஒன்று திரண்டு யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது யாழ்.பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியம். இதுகுறித்து மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முழு உலகுமே பார்த்திருக்க, எண்ணற்ற மனித ஆன்மாக்கள் காவு கொள்ளப்பட்ட- சிவப்புக்கறை படிந்த மே மாதம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை உயிரோடு ஒன்றித்த துயரம்மிக்க நாட்களாகும். விதியென்ற சூறைக்காற்று சுழன்றடிக்கும்போது பூவென்றும் பிஞ்சென்றும் காயென்றும் கனியென்றும் கருதுவதில்லை. ஆனால் விதிமீறி மதிகெட்டு நிகழ்ந்த இறுதிப் போரிலே குழந்தைகள் பெரியவர் என்ற பேதங்களேதுமின்றி ஆயிரமாயிரமாய் மனிதம் வீழ்த்தப்பட்டன. மறைந்த மானுடனை நினைவுகூருவது சக மானுடனின் மனிதப்பண்பாகும். இந்த விதியை மீறுபவன் பந்தம், பாசம் என்ற பிணைப்பிலிருந்து மீண்டவனாய் மனிதம் என்ற கட்டுக்கோப்பிலிருந்து ஒதுங்கப்பட்டவனாகவே இருக்கமுடியும். தானாடாவிட்டாலும் தன் ஆசை ஆடும் என்பதுபோல் இறந்தவரைப் பிரிந்தவர் அழுவதற்குத் தடை விதிப்பினும் அவர்தம் உயிரான்மா அழுதுகொண்டேயிருக்கும்.

அதனைத் தடுக்க யாராலும் முடியாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் குரலாகவும் உலகத் தமிழ் மக்களின் உன்னத சமூகமாகவும் காலாதிகாலமாக விளங்குகின்றது. தமிழ்மக்கள் சார்பில் எந்தவொரு மாற்றம் நிகழினும் சர்வதேசம் காதுகொடுத்துக் கேட்கும் அபிப்பிராயத் தளமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே. அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் மரித்தோர் நினைவு தினத்தைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் ஏற்னவே எச்சரிக்கை விடுத்திருந்தாலும் யாழ். பல்கலைக்கழகத்தின் அத்தனை செயற்பாடுகளும் ஸ்தம்பித்துப் போகும் வினோதமான இந்த விடுமுறை எதற்காக? வளாகத்தினுள் நினைவேந்தல் நிறைவேறிவிடக் கூடாது என்பதற்காக அரசாங்கமும் பல்கலை நிர்வாகமும் கூட்டிய கூட்டுத்திட்டமாகவே இதைக் கருதுகின்றோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது எப்பொழுதுமே எம் மக்களின் குரலாகவே ஒலித்துக் கொண்டிருக்கும். இந்தக் குரலின் தொனிப்பில் யாருக்கும் கெடுதல் நேராது.

நாம் உலகத்தை நேசிக்கக் கற்றவர்கள். மானுடம் தழைக்கவேண்டும் என விரும்புபவர்கள். “ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்களே” எனப் பேரரறிஞர் அண்ணா கூறியதைப் போல் இனவொற்றுமையை மதிப்பவர்கள். நாகரிகம் மிக்க கல்விப் புலம்கொண்ட எம்மீது பயங்கரவாதச் சேற்றினைப் பூசாதீர்கள். யுத்தத்தில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூரவிடாமல் தடுக்கும் அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கப்போகின்றது என்பது கடந்த ஐந்து வருடங்களாக எம்மவரிடையே எழுந்துவரும் கேள்வியாகும். மாணவர் சமூகத்தின் குரல்வளை திட்டமிட்டு நசுக்கப்படுகிறது, இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. எத்தடை வரினும் மனங்களால் ஒன்றுபட்டு எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம். - என்றுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக