வெள்ளி, 2 மே, 2014

ஜேர்மன் முதன் மந்திரி - பராக் ஒபாமா சந்திப்பு !!

ஜேர்மன் முதன் மந்திரி அங்கலா மேக்கல் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பல மணி நேரம் கலந்து உரையாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க, ஜேர்மன் அரசியலில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருந்த, அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அலுவலகத்தின் தொலைபேசி ஒட்டுக்கேட்ட சம்பவத்திற்குப் பின், இதுவே அங்கலா மேக்கலின் முதன் முறையாக  அமெரிக்க ராஜாங்க விஜயமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாடானது ஐரோப்பாவில் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட தேசமாக மட்டும் கருதப்பட்ட காலம் மாறி, தற்போது ஐரோப்பிய அரசியலிலும் முக்கிய பங்காற்றி வருவதாக அமெரிக்கா கருதுவது குறிப்பிடப்பட்டுள்ளது.


உக்ரைன் அரசியற் பிரச்சனை, தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட சம்பவம், அமெரிக்க ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமெனப் பல அரசியல் இரு தலைவர்களின் சந்திப்பில் மிகவும் முக்கியமான விடயங்களாக அமைந்திருந்தன.

அமெரிக்க ஜேர்மன் அரசியலில், தொலை பேசி ஒட்டுக்கேட்ட விவகாரத்தால் ஏற்பட்ட சங்கடமான சூழல், கடந்த காலமாக்கப்பட்டு, இன்றைய நடை முறை அரசியல் மிகவும் ஆரோக்கியமாகக் கலந்து உரையாடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அத்தோடு ரஷ்யாவோடு ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடு, அமெரிக்க ஐரோப்பிய நெருக்கத்தை ஏற்படுத்தியும் உள்ளதாகச் சுட்டிக்காடப்பட்டுள்ளது.

மேற்கு, கிழக்கு ஜேர்மன் இணைவிற்கு ரஷ்யா துணை போன காரணத்தால், சர்வ தேசப் பிராந்திய உரிமைச் சட்டத்தை வஞ்சிக்கும் ரஷ்ய அரசியற் போக்கை, ஜேர்மன் நாடு சகிப்பது பற்றி விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி, கிறிமியை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்ட விடயத்தை உலக அரசியல் அதிசயம் போன்று ஜேர்மன் மக்கள் கருதுவது பற்றியும் விமர்சிக்கத் தவறவில்லை.

அண்மையில் ஜேர்மனியில் இடம் பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில், ரஷ்யாவோடு கிறிமி இணக்கப்பட்டமை வரவேற்கத்தக்கதென 53 சதவீத மக்கள் கூறியிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக