வெள்ளி, 16 ஏப்ரல், 2010

லசந்த கொலை: சந்தேகநபர்கள் விடுதலை

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களில் சந்தேகம் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 சிப்பாய்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களைக் கொன்றது, கொல்ல முயற்சித்தது போன்ற குற்றங்களுக்காக சந்தேகத்தின் பேரில் இராணுவ உளவுத் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கடந்த வருடம் ஜனவரி எட்டாம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டது, பின்னர் ரிவிரா பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னகோன் கொலை முயற்சிக்கு உள்ளாகியிருந்தது, கீத் நுவார் என்ற மூத்த செய்தியாளரும் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தது போன்ற சம்பவங்களில் இந்த இராணுவ உளவுப் பிரிவுச் சிப்பாய்களுக்கு தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முயற்சித்தது தொடர்பாக அவசரகால சட்டங்களின் கீழ் இந்தச் சிப்பாய்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்திருந்தனர் என்றும், தற்போது இவர்கள் விடுவிக்கப்பட்டு, தங்களுடைய முந்தைய பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்படுவதாகவும் பயங்கரவாத விசாரணை பொலிஸ் பிரிவினர் கொழும்பு மஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதே குற்றச்சாட்டுகள் தொடர்பில் வேறு சில சிப்பாய்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.பத்திரிகையாளர் விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக பிரிகேடியர் துமிந்த கெப்பிதிவலன என்ற மூத்த இராணுவ அதிகாரி ஒருவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணைகள் குறித்த அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் பொலிசாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக