வெள்ளி, 7 நவம்பர், 2014

கொஸ்லாந்தையில் தொடரும் மீட்புப் பணி! இன்றும் இரு சடலங்கள் மீட்பு..!!! (படங்கள் இணைப்பு)

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் இன்று மதியம் மீட்கப்பட்டதாக  இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

54 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமும் பிள்ளையொன்றின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மண்சரிவினால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்களின் உதவியை நாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளின் போது மீரியபெத்த கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் உதவியை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிடுகின்றார்.

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் மீட்கப்பட்ட சடலங்களில், அடையாளம் காணப்படாத சடலங்களை டி.என்.ஏ (DNA) பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இதில் தற்போது இருவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 14 பேர் சரியான தகவல்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட அனைத்து உடல்களும் அடையாளம் காண்பதே டீ.என்.ஏ பரிசோதனை முன்னெடுக்கப்படுவதன் நோக்கமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மீரியபெத்தை மண்சரிவில் புதையுண்டவர்களில் 11 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படுவதோடு, உயிரிழந்தமைக்கான தெளிவான காரணங்கள் குறிப்பிடப்பட்டு மரண சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக