வெள்ளி, 2 மே, 2014

இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் நீக்கப்பட வேண்டும் - மாவை

இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் உடன் நீக்கப்பட்டு, 17 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே தினக் கூட்டம் நேற்று யாழ். சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே நாள் தீர்மானங்களையும் பிரகடனங்களையும் அக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நடைமுறையில் இருந்த 17ஆவது அரசியலமைப்பு சட்டம் ஓரளவுக்கேனும் சுதந்திரமாக இருந்தது, அரசு சர்வாதிகாரமாக அதனை நீக்கி 18ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி நிர்வாக முறையை ஜனாதிபதியிடம் அதிகாரங்களை கையளிக்க நடவடிக்கை எடுத்தது.
அந்த 18 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் உடன் நீக்கப்பட்டு, 17 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்
ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து மாகாணங்களுக்கு குறிப்பாக வடக்கு, கிழக்கு இனைந்த அரசியலமைப்பின் 13 ஆவது அரசியலமைப்பு சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதற்குமப்பால் சென்று அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அரசியல் காரணங்கள் என கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் என்னமோ தீர்த்து வைக்கும் திடசங்கற்பமோ இன்றைய அரசுக்கு இல்லை
ஜனநாயக தீர்ப்புக்களை ஏற்று தீர்வு காணும் ஜனநாயக அரசாங்கம் ஒன்று இன்னும் இந்த நாட்டில் ஏற்படவில்லை
வடக்கு, கிழக்கு மக்கள் தம்மை தாமே ஆளுகின்ற தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வு ஒன்று ஏற்பட அனைவரும் ஓரணியில் திரண்டு ஜனநாயக வழியில் போராடி அவ் இலக்கை அடைய இம் மே நாளில் உறுதி பூணுவோம்.
ஒன்று பட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மக்கள் தம் மண்ணில் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டும் அரசியல் தீர்வை சர்வதேசமே அங்கீகரி என அணி திரண்டு உரக்க குரல் எழுப்புவோம் செயலாற்ற உறுதி பூணுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.
இவ்வாறாக மே தின கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 32 தீர்மானங்களையும் பிரகடனங்களையும் வெளியிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக