வெள்ளி, 2 மே, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்புடனான எங்கள் உறவு உணர்வுபூர்வமானது- மனோ கணேசன்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்புடனான எங்கள் உறவு உணர்வுபூர்வமானது. அதை எவராலும் அழிக்க முடியாது. அந்த உறவு, வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு என்று நாடு முழுக்கவும் அரசியல் வடிவம் பெறுகின்ற, அகில இலங்கை தமிழ் தேசிய கூட்டணியாக மாறும் காலம் ஒருநாள் வரும். அது எப்போது என என்னால் உடனடியாக சொல்ல முடியாது. ஆனால் அது ஒருநாள் நடக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலத்தை தலைமை தாங்கி வழிநடத்திய மனோ கணேசன், ஊர்வல இறுதியில் ஜிந்துபிட்டி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
நாட்டை பிரிக்காமல், அதிகாரத்தை பிரிப்போம். அரசியல் அதிகாரத்தை பகிந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம். மலையக மக்களின் காணி-வீட்டுரிமைக்காக குரல் கொடுத்து மலையக தொழிற்சங்க கூட்டமைப்பில் இணைந்து போராடுவோம்.
கொழும்பிலே வீட்டுடைப்புக்கு எதிராக குரல் கொடுத்து போராடுவோம். உழைக்கும் மக்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்திற்காக போராடுவோம்.
இனவாதத்தை, மதவாதத்தை எதிர்த்து ஒன்று சேர்ந்து போராடுவோம். இந்த தாரக மந்திரங்களே எங்கள் 2014ம் வருட மேதின தீர்மானங்கள்.
இந்த அரசாங்கம் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த அரசில் இருந்து வெளியேறி இந்த அரசின் முடிவை துரிதப்படுத்தும்படி, இதன் உள்ளே இருக்கும் சிறுபான்மை கட்சிகளை கோருகிறேன்.
கடந்த மேல்மாகாணசபை, தென்மாகாணசபை தேர்தல்களில் இந்த அரசுக்கு இரண்டரை இலட்சம் வாக்குகள் குறைந்துள்ளன.
இதனால் மகிந்த ராஜபக்ஷ ஆடிப்போயுள்ளார். படிப்படியாக தனது செல்வாக்கு சிங்கள மக்கள் மத்தியில் குறைந்து வருவதை அவர் புரிந்து கொண்டுள்ளார்.
இதனால்தான் இடைதேர்தலை உடன் நடத்தி தன்னை திடப்படுத்தி கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
ஆனால் அரசின் பயணம் இன்று எந்த பக்கம் திரும்புவது என வழி தெரியாமல் முச்சந்தியில் விழி பிதுங்கி நிற்கிறது. ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்ற தேர்தலா என இரண்டையும் பற்றி அரசாங்கம் பேசி வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான எங்கள் உறவு உணர்வுபூர்வமானது. அதை எவராலும் அழிக்க முடியாது.
அந்த உறவு, வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு என்று நாடு முழுக்கவும் அரசியல் வடிவம் பெறுகின்ற, அகில இலங்கை தமிழ் தேசிய கூட்டணியாக மாறும் காலம் ஒருநாள் வரும்.
அது எப்போது என என்னால் உடனடியாக சொல்ல முடியாது. ஆனால் அது ஒருநாள் நடக்கும்.
இந்நாட்டில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் தமிழ் மக்கள் தத்தம் தனித்துவங்களுடன் உள்வாங்கப்பட்டு, ஒன்றுபட வேண்டும் என்று, மேல்மாகாண தேர்தல் வேளையில் எமது கூட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் கூறிய கருத்தை நான் மிகவும் இரசித்தேன்.
இன்று மேல்மாகாணத்திலே வடக்கு, கிழக்கு மாவட்டங்களை பூர்வீகமாக கொண்ட பெருந்தொகை தமிழர்கள் வாழ்கிறார்கள். அதேபோல் கிளிநொச்சியில், முல்லைத்தீவில், வவுனியாவில், மலையகத்தை பூர்வீகமாக கொண்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இந்த யதார்த்தத்தை ஜனநாயக மக்கள் முன்னணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் புரிந்து கொண்டுள்ளன. எங்கள் புரிந்துணர்வு, எங்களை பிரித்து அரசியல் செய்ய நினைக்கும் சிலருக்கு கசக்கிறது.
அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. எங்களை பிரிக்க நினைக்கும் இவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஐக்கிய தேசிய கட்சியுடனான எமது உறவை பற்றி நானும், அந்த கட்சியின் தலைவரும்தான் பேசி முடிவு செய்வோம்.
இனிமேல் எதிர்காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் நகரசபை, மாநகரசபை, மாகாணசபை, பாராளுமன்றம் என்ற எந்த ஒரு தேர்தலிலும் தமிழ் வாக்குகள் பெற வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு பெரும்பான்மை கட்சியும் எங்களை நாட வேண்டும்.
நாங்கள் கூட வராவிட்டால் தமிழ் வாக்கும் உங்களுக்கு இல்லை. தமிழ் பிரதிநிதித்துவமும் உங்களுக்கு இல்லை. ஐதேகவில் எங்களை மதிக்கும் சில தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மதிக்கும் என் நண்பர்கள்.
ஆனால் அவர்கள் எங்களை மதிக்கும் பாங்கை அவர்கள் கட்சியில் உள்ள இன்னும் சிலருக்கு கற்று கொடுக்க வேண்டும். அது நடக்குமானால், நாங்களும் வெல்லலாம். அவர்களும் வெல்லலாம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக