வெள்ளி, 23 மே, 2014

வடக்கில் பாதுகாப்பு படையினரால் 13,200 பொய்ன்ட் இரத்தம் தானம்...!!!!

வட பகுதியில் வாழும் தமிழ் மக்களின் நலன் கருதி கடந்த இரண்டு வருட காலப் பகுதிக்குள் மாத்திரம் பாதுகாப்புப் படையினர் ஏற்பாடு செய்த பல்வேறு இரத்ததான நிகழ்வுகள் மூலம் 13 ஆயிரத்து 200 பொய்ன்ட் இரத்தம் வழங்கியுள்ளதாகபாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இவற்றில் இராணுவத்தினர் 10 ஆயிரம் பொயின்ட் இரத்தத்தையும். கடற்படையினர் 2000 பொயின்ட் இரத்தத்தையும். விமானப் படை 1200 பொயின்ட் இரத்தத்தையும். வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


வட பகுதியிலுள்ள எமது சகோதர தமிழ் மக்களின் உடல்களில் இராணுவத்தினரின் இரத்தம் ஓடுவது பெருமைக்குரிய விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் உரையாற்றுகையில் :- வடக்கில் நடைபெறும் இரத்த தான முகாம் நிகழ்வுகளை இராணுவத்தினர் குழப்புவதாக சிலர் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் எதுவித உண்மையும் கிடையாது. அதனை முற்றாக மறுக்கிறேன்.

ஏனெனில் இராணுவம் வட பகுதி தமிழ் மக்களின் நலன் கருதி பல்வேறு சந்தர்ப்பங்களில் இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளது.

இராணுவம் வழங்கிய அளவுக்கு இதுவரை வேறு எவரும் இரத்தம் வழங்கவில்லை. அதேபோன்று தனிப்பட்ட முறையிலும் பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படையினர் இரத்தத்தை வழங்கி வருகின்றனர். அவசரத் தேவைகளின் போது அரிய வகை (குறூப்) இரத்தத்தையும் உடனடியாக வழங்கக் கூடிய வசதிகள் உள்ளன. அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு படை வீரர்களின் இரத்தம் இரத்த குறூப் தொடர்பான தகவல்கள் கணனியில் உள்ளன.

இவ்வாறு சேர்க்கப்பட்ட, படையினரால் வழங்கப்பட்ட இரத்தம் வட பகுதி நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்கள் போன்ற அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக