வியாழன், 28 அக்டோபர், 2010
இலங்iயின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச, பக்கச் சார்பற்ற விசாரணை அவசியம்-பிரித்தானியா..!
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச, பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்று அவசியம் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரான சிவோண் மக்டொனால்ட் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் அந்தஸ்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கு மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி எவ்வளவு முயற்சிக்கின்றபோதிலும், அங்கு படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவை குறித்து உறுதிசெய்வதற்கு ஒரு சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்ற தனது கருத்துடன் பிரித்தானிய பிரதமர் உடன்படுகின்றாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்தார். இலங்கையில் என்ன நடந்தது என்பதை அறிய எமக்கு ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம். செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவை குறித்து நாம் பார்க்கிறோம். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் கூறியவை சரியா என்பதை உறுதி செய்ய ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை அங்கு அவசியம் என்றார் பிரிட்டிஷ் பிரதமர். இந்த விடயம் குறித்து பி.பி.சி.யிடம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவோண் மக்டொனால்ட்டிடம், இந்த விடயத்தில் பிரித்தானியா தான் அங்கம் வகிக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் இந்த விடயத்தில் முரணாக இருக்கும் நிலையில் அது சிரமம் என்று தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விசாரணையின் மூலம் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து உறுதி செய்ய முடியாது என்றும் அந்த விசாரணை பக்கச்சார்பற்ற வகையில் நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என்றும் சிவோண் மக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக